பதற வைக்கும் பாலியல் புகார்..லிஸ்ட்டில் சேர்ந்த பிரபல நடிகர்! இவருமா? மலைத்துப் போன மலையாள சினிமா!
திருவனந்தபுரம் : ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மலையாள திரையுலகம் எப்போதும் பதற்றத்திலேயே இருக்கிறது. யார் மீது எப்போது பாலியல் புகார் வரும் என்பதுதான் தற்போது அங்கு பேசுபொருளாக இருக்கிறது. இந்த நிலையில் மலையாள திரையுலகில் நடிகராகவும் பிரபல இயக்குனராகவும் வலம் வரும் பாபுராஜ் என்பவர் மீது துணை நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரை எடுத்து ஆதிமலை காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.
மலையாள திரை உலகில் ஒரு 'பவர் குரூப்' ஒட்டுமொத்த திரையுலகை கட்டி ஆள்வதாகவும், நடிகைகள், பெண் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும் நீண்ட காலமாகவே புகார் இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓடும் காரில் பிரபல நடிகை ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோவும் எடுக்கப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பிரபல நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கில் கைது செயப்பட்ட சிலர் இன்னும் சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் புகாரினை தொடர்ந்து ஹேமா கமிட்டி அமைத்து அரசு உத்தரவிட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் அது வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டு அந்த அறிக்கை வெளியான பிறகு மலையாளத் திரையுலகம் புரட்டிப் போட்டது போல ஆகிவிட்டது. பல நடிகைகளுக்கு, நடிகர்களும், இயக்குனர்களும் பாலியல் தொல்லை தந்தது வெளிச்சத்திற்கு வந்தது. நடிகைகள், பெண் கலைஞர்கள் தொடர்ந்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது, இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடிகர் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியண்ணன் பிள்ளை, எடவேல பாபு, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகாருக்குள்ளான நடிகர்கள் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்த பாலியல் குற்றச்சாட்டாக பிரபல இயக்குனரும் நடிகருமான பாபுராஜ் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருக்கிறார் துணை நடிகை ஒருவர். ஏற்கனவே கேரள காவல்துறை சார்பில் பாதிக்கப்பட்ட நடிகைகள் புகார் அளிக்க மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி முகவரி அளிக்கப்பட்டு இருந்தது. அந்த மின்னஞ்சல் மூலம் டிஜிபிக்கு அந்த துணை நடிகை புகார் அளித்திருக்கிறார். இதை அடுத்து பாபுராஜ் மீது ஆதிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபுராஜுக்கு மூணாறில் ஒரு ரிசார்ட் உள்ளது. அந்த ரிசார்ட்டில் கல்லூரி படிப்பை முடித்த இளம் பெண் ஒருவர் ரிசப்ஷினிஸ்ட்டாக பணிபுரிந்து வந்திருக்கிறார். 2018 ஆம் ஆண்டு பாபுராஜின் பிறந்தநாள் விழா நடந்தபோது அவரிடம் அந்த இளம் பெண் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து அதற்கு அடுத்த ஆண்டு தான் எடுக்கும் புதிய படத்துக்கு விவாதத்திற்கு ஆலுவாவில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் என பலர் வருவார்கள் என கூறி அழைத்துச் சென்ற நிலையில் அங்கு யாருமே இல்லை என கூறப்படுகிறது. பாபுராஜூம் அவரது உதவியாளர் மட்டுமே அங்கு இருந்த நிலையில் அந்த இளம் பெண்ணை தனி அறையில் வைத்து பாபுராஜ் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும், ஒரு நாள் முழுவதும் அங்கு அடைத்து வைத்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அடுத்த நாள் அவரை வீட்டிலிருந்து அனுப்பிய நிலையில், அதற்குப் பிறகு அந்த பெண்ணை அவர் சந்திக்கவில்லை.
இதை எடுத்து சிறிது கால இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அந்த இளம் பெண்ணுக்கு போன் செய்த பாபுராஜ் தன்னுடைய படத்தில் உதவி இயக்குனர் வாய்ப்பு தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் ஏற்கனவே தனக்கு நடந்த கொடுமை காரணமாக அந்த பெண் வாய்ப்பை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. பல நடிகர்கள் மீது புகார் குவிந்து வரும் நிலையில் தனக்கும் நீதி கிடைக்கும் என நினைத்ததை அடுத்தே தற்போது புகார் செய்திருப்பதாக அந்த துணை நடிகை தெரிவித்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது மலையாளத் திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications