"எங்கள் தந்தையை கொன்றவர்கள்.." வயநாட்டில் கலங்கிய ராகுல் காந்தி.. பிரியங்கா குறித்தும் நெகிழ்ச்சி
திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதற்கிடையே தனது சகோதரிக்காக வயநாடு தொகுதியில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, மோடி அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். நாட்டின் அரசியலமைப்பைக் காக்க இ்போது போராட்டம் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி என்று இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார்.

நமது நாட்டின் சட்டப்படி ஒருவர் ஒரு தொகுதிக்கு மட்டுமே எம்பியாக இருக்க முடியும். இதனால் ராகுல் காந்தி தனது வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல்: சமீபத்தில் ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அத்துடன் வயநாடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் நவ. 13ம் தேதி வயநாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவ. 23ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையே வயநாட்டில் இன்று ராகுல் மற்றும் பிரியங்கா இணைந்து பிரச்சாரம் செய்தனர். அப்போது பேசிய ராகுல், அரசியலமைப்புச் சட்டம் என்பது அன்புடனும் பணிவுடனும் எழுதப்பட்டது என்றும் வெறுப்புடன் எழுதப்பட்டது இல்லை என்று குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி பேச்சு: வயநாட்டில் ராகுல் காந்தி மேலும் பேசுகையில், "இன்று நாட்டில் நடக்கும் முக்கிய போராட்டமே நமது அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பதற்கான போராட்டம் தான். நமக்குக் கிடைக்கும் பாதுகாப்பு, நமது நாட்டின் மகத்துவம் என எல்லாவற்றுக்கும் காரணமே இந்த அரசியலமைப்பு தான். இந்த அரசியலமைப்பு கோபம் மற்றும் வெறுப்புடன் எழுதப்பட்டது இல்லை. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள், வருடக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்தவர்கள் எழுதியது தான் நமது அரசியலமைப்பு. அன்புடனும், பாசத்துடனும் தான் நமது அரசியலமைப்பு அவர்கள் எழுதினார்கள்.
வெறுப்பு கூடாது: தற்போது நமது நாட்டில் நிலவும் அரசியல் என்பது அன்புக்கும் வெறுப்புக்கும் இடையேயான போராட்டம். நாட்டு மக்கள் வெறுப்பைப் பரப்புவோரைப் புறந்தள்ளிவிட்டு இரக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்கிறார்கள். எனது சகோதரி பிரியங்கா காந்தி அன்பும் பாசமும் நிறைந்தவர். அவரிடம் எந்தளவுக்குத் துணிச்சல் இருக்கிறதோ.. அதை அளவுக்கு அன்பும் பாசமும் இருக்கிறது. எனது தந்தையைக் கொன்றவர்களில் ஒருவரை அவர் நேரில் சந்தித்தார். அவரை மன்னிக்கவும் செய்தார். அதுதான் இந்தியாவுக்குத் தேவையான அரசியல். அதைச் செய்தும் காட்டியவர் தான் பிரியங்கா" என்று பேசினார்.

பிரியங்கா காந்தி: இந்த பேரணியில் தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, "பிரதமர் மோடியின் அரசு அவரது பணக்கார தொழிலதிபர் நண்பர்களுக்காக மட்டுமே செயல்படுகிறது. சாதாரண மக்கள் குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை.. படித்த இளைஞர்களுக்கு வேலை கூட கிடைப்பது இல்லை. சுகாதாரம், கல்வி மற்றும் மக்களின் நல்வாழ்வை வழங்குவதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை" என்று மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மேலும், அவர் வயநாடு தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் பேசினார். காட் சாலையில் இரவு நேரம் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இப்பகுதியில் நிலவும் மனித- விலங்கு மோதல்கள் குறித்துப் பேசிய அவர், அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். மேலும், வயநாட்டில் எல்லா வசதிகளுடன் கூடிய மருத்துவமனையைக் கட்ட முயல்வேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications