35 ஆண்டுகளாக பிரசாரம் செய்த நான் இன்று எனக்காக வாக்கு சேகரிக்கிறேன்.. வயநாட்டில் பிரியங்கா காந்தி
திருவனந்தபுரம்: 17 வயதில் தந்தை ராஜீவ் காந்திக்காக பிரசாரம் செய்ய தொடங்கி 35 ஆண்டுகளாக தேர்தல் பிரசாரம் செய்த நான் இன்று எனக்காக வாக்கு சேகரிக்கிறேன் என்று வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார். வயநாடு லோக்சபா தொகுதியில் தாயார் சோனியா காந்தி, அண்ணன் ராகுல் காந்தி, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருடன் சென்று பிரியங்கா காந்தி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது: நான் 17 வயதில் என் தந்தை ராஜீவ் காந்திக்காக பிரசாரம் செய்தேன். என்னுடைய தந்தை ராஜீவ் காந்தி, அம்மா சோனியா காந்தி, அண்ணன் ராகுல் காந்தி ஆகியோருக்காக 35 ஆண்டுகளாக தேர்தல் பிரசாரம் செய்துள்ளேன்.இந்த முறைதான் நான் எனக்காக முதல் முறையாக தேர்தல் பிரசாரம் செய்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

வயநாடு தொகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டகாயம் பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்த போது அந்த மக்கள் அனைத்தையும் இழந்து நின்றிருந்தனர். ஆனால் அவர்கள் அந்த நிலையிலும் துணிச்சலுடன் நின்றிருந்தனர். வயநாடு தொகுதியின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதப்படுகிறேன். ஆனால் ஆளும் அதிகாரத்தில் இருப்பவர்களோ, வெறுப்பையே விதைக்கின்றனர்.
இந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு லோக்சபா தொகுதியில் நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கக் கூடிய அதிகாரப்பூர்வமான எம்பியாக பிரியங்கா காந்தி இருப்பார். அதேநேரத்தில் வயநாடு தொகுதிக்காக குரல் கொடுக்கும் மற்றொரு எம்பியாகவும் நான் இருப்பேன். உங்கள் தொகுதிக்கு இந்த இரு எம்பிகளுமே குரல் கொடுப்போம் என்றார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், பிரியங்கா காந்தி மிக வலிமையான ஒரு தலைவர். வயநாடு லோக்சபா தொகுதி மக்கள், பிரியங்கா காந்தி மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications