காதலர் தினத்தன்று பசு அரவணைப்பு தினம்.. ஏன் தெரியுமா.. வினோத காரணத்தை சொன்ன கேரள பாஜக தலைவர்
காதலர் தினத்தன்று பசு அரவணைப்பு தினத்தை ஏன் கொண்டாட வேண்டும் என்பதைக் கேரள பாஜக தலைவர் விளக்கியுள்ளார்
திருவனந்தபுரம்: வரும் பிப்.14ஆம் தேதி காதலர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ள நிலையில், இது குறித்து பாஜக கேரள மாநில தலைவர் சுரேந்திரன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் பிப். 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும்.. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகத் தான் காதலர் தின கொண்டாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், சில குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் காதலர் தினத்தைக் கொண்டாட்டங்கள் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. கடந்த காலங்களில் காதலர் தினத்தன்று கேளிக்கை விடுதிகளுக்கு சென்று அத்துமீறித் தாக்கிய சம்பவங்கள் எல்லாம் கூட நடந்துள்ளது.

காதலர் தினம்
இதற்கிடையே சமீபத்தில் இந்திய விலங்குகள் நலவாரியம் சார்பில் வெளியான அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதில், "பசு நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பது அனைவருக்கும் தெரியும். பசுக்கள் வாழ்வாதாரத்தை நீடித்து.. பல்லுயிர்மத்து உதவுகிறது.. ஒரு தாயைப் போல அது இருப்பதாலேயே காமதேனு' என்றும் கோமாதா' என்றும் அழைக்கிறோம். மேற்கத்திய கலாச்சாரத்தில் வேத மரபுகள் அழிந்து வருகிறது. திட்டமிட்டு இதை அழித்து வருகிறார்கள்..

பசு அரவணைப்பு தினம்
எனவே, பசு பிரியர்கள் அனைவரும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அரவணைப்பு தின'மாக (Cow Hug Day) கொண்டாட வேண்டும்.. பசுக்களை அணைக்கும் போது நமக்கு எமோஷனல் ரீதியாக மேம்படும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது. இணையத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே கேரள பாஜக தலைவர் கே சுரேந்திரன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கேரள அரசை விமர்சித்த அதே நேரம் பசு அரவணைப்பு தினத்தை ஏன் கொண்டாட வேண்டும் என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

கேரள பாஜக
பிப்ரவரி 14ஆம் தேதி பசுக்கள் அரவணைப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற விலங்குகள் நல வாரியத்தின் வேண்டுகோளை வரவேற்ற கேரள பாஜக தலைவர் கே சுரேந்திரன், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசை விட, மாநிலத்தில் உள்ள மக்களுக்குப் பசுக்களே அதிக நன்மை செய்வதாகத் தெரிவித்தார்.. குறிப்பாகக் கேரளாவிற்கு அமைச்சர்களை விடப் பசுக்கள் அதிக பங்களிப்பை வழங்குவதாகவும் கேரள அரசு விவசாயத் துறையை அழித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஏன் தெரியுமா
மேலும், மக்கள் வருமானம் ஈட்டப் பசுக்களே உதவுகின்றன என்றும் சுரேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "காதலர் தினத்தைக் கொண்டாடுங்கள்.. அதை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.. நாங்கள் சொல்வது அன்றைய தினம் பசுக்களையும் சந்தித்து மரியாதை செய்ய வேண்டும் என்பதுதான்.. கேரள அரசைக் காட்டிலும் இங்குள்ள பசுக்களே மக்களுக்கு அதிக நல்லதைச் செய்கிறது.

தப்பு இல்லை
எனவே, பிப்ரவரி 14ஆம் தேதி பசுக்கள் அரவணைப்பு தினமாகக் கொண்டாடுவதில் எந்தவொரு தவறும் இல்லை.. பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசில் இருக்கும் அமைச்சர்களை விடப் பசுக்கள் நமக்கு அதிக நன்மை செய்கின்றனர். மேலும், பசுக்களைக் கட்டி அணைக்கும் சமயத்தில் நமது மனதும் சந்தோசமடைகிறது. இதன் காரணமாகவே பசு அரவணைப்பு தினத்தைக் கொண்டாடச் சொல்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications