கொடைக்கானலுக்கு குளுகுளு பயணம்.. வாகன சோதனையில் ஏட்டுவிற்கு மறக்க முடியாத சம்பவம்.. சிக்கிய இளைஞர்
கொடைக்கானல்: கொடைக்கானல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் வாகன சோதனையின்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஏட்டை தள்ளிவிட்டு எக்குத்தப்பாக நடந்து கொண்டதால் இப்போது கம்பி எண்ணுகிறார்.
தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்துவது என்பது பொதவான நடைமுறையாகும். எல்லா காவல் நிலையத்திலும் உள்ள போலீசார் தினசரி குறிப்பிட்ட இடங்களில் திடீரென வாகன சோதனை நடத்துவது வழக்கமாகும். அப்படி சோதனை நடத்தும் போது, வாகன ஓட்டிகள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் காட்ட வேண்டும். வாகனத்தின் ஆவணங்களை சரியாக வைத்திருக்க வேண்டும். தலைகவசம் அணிந்து தான் செல்ல வேண்டும். பின்னால் யாராவது அமர்ந்து இருந்தால் அவர்களும் தலை கவசம் அணிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

கார், பைக், ஆட்டோ என எந்த வாகனமாக இருந்தாலும் இன்சூரன்ஸ் கரெண்டில் இருக்க வேண்டும். வாகனத்திற்கு கண்டிப்பாக புகை பரிசோதனை சான்று இருக்க வேண்டும். காரில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும்.. கார்களுக்கும் கட்டாயம் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். அதேபோல் சரக்கு வாகனங்கள் என்றால் அதில் சரியான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
எந்த வாகனம் என்றாலும் வாகன ஓட்டுநர்கள் மது அருந்தி இருக்கக் கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கண்டிப்பாக வாகனம் பறிமுதல் செய்யப்படும். அபராதமும் கடுமையாக விதிக்கப்படுகிறது. இதேபோல் பார்க்கிங் இல்லாத பகுதிகளில் வாகனம் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது. இது எல்லா ஊர்களிலும் உள்ள நடைமுறையாகும்.
இந்நிலையில் தேனி மாவட்டம் காமக்காப்பட்டி போலீஸ் சோதனை சாவடியில் தாண்டிக்குடி போலீஸ் ஏட்டு நரேந்திரசிங் மற்றும் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக கொடைக்கானல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு வாலிபரை மறித்து சோதனை செய்ய முயன்றுள்ளார்கள்.
அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றார். உடனே போலீஸ் ஏட்டு சோதனை சாவடியில் நின்ற ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு அவரை பிடிக்க துரத்தி செனறுள்ளார். கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைப்பாதையில் புலிப்பொடவு என்னுமிடத்தில் அந்த இளைஞரை அவர் மடக்கி பிடித்தார். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வர முயன்றார். ஆனால் அவர், போலீஸ் ஏட்டுவை தள்ளிவிட்டு அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.
இதையடுத்து புகாரின பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற வாலிபரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரையில் வாகன சோதனையில் தப்பி சென்ற அதே இளைஞரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், மதுரை அசோக் நகரை சேர்ந்த பொன் செல்வேந்திரன் (வயது 21) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார்கள். போலீசார் வாகன சோதனையின் போது நிறுத்தி பதில் அளிக்க வேண்டியது அவசியம் ஆகும். ஹெல்மெட் இல்லை என்றால் 1000 ரூபாய் தான் அபராதம். அதற்கு பயந்து வாகனத்தை நிறுத்தாமல் சென்று சேட்டை செய்தால் கம்பி எண்ண வேண்டியது தான் வரும்.












Click it and Unblock the Notifications