தீபாவளி லீவில் டூர் போக செம ஸ்பாட்.. இயற்கையின் பொக்கிஷம்! ஊட்டி, கொடைக்கானலை விடுங்க.. இத பாருங்க
சென்னை: தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் வீக் எண்டில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவர். குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல வேண்டும், அதுவும் இயற்கை காட்சிகள், அட்வென்சர் பயணம் என அனைத்தும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்சாக தேனி இருக்கும். தேனியில் உள்ள முக்கியமான இடங்களை இங்கே பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு இந்த ஆண்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் வீக் எண்டில் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள்.

ஆனால், எங்கே செல்வது என யோசிப்பவர்களுக்கு சிறந்த சுற்றுலா இடத்தை பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல வேண்டும்.. அதுவும் இயற்கை காட்சிகள், அட்வென்சர் பயணம் என அனைத்தும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு பெஸ்ட் இடமாக தேனி இருக்கும். இயற்கையின் பொக்கிஷம் என அழைக்கப்படும் தேனியில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றியும் அங்கே எப்படி செல்லலாம் என்பது பற்றியும் இங்கே பார்க்கலாம்..
* டாப்ஸ்டேஷன்:
தேனி மாவட்டத்தில் உள்ள சிறந்த டூரிஸ்ட் ஸ்பாட்களில் ஒன்றாக டாப் ஸ்டேஷன் உள்ளது.
போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டக்குடி ஊராட்சியில் அமைந்து இருக்கும் குரங்கணி மலை உச்சியில் டாப்ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த மலைக்கு செல்லும் வழியில் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் சுற்றிலும் ஏலக்காய், காஃபி தோட்டங்களை காண முடியும்.
மலை உச்சியில் இருந்து பசுமை பள்ளத்தாக்குகளை காணலாம். இங்கே வண்டியில் செல்ல வேண்டும் என்றால்,கேரளாவின் மூணாறு அருகே உள்ள மாட்டுப்பட்டி அணை வழியாக செல்ல வேண்டும். டிரெக்கிங் செல்ல விரும்புவர்கள் வன அலுவலரிடம் அனுமதி பெற்று செல்லலாம். குரங்கனியில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரம் பாதை டாப்ஸ்டேஷனுக்கு உள்ளது. குரங்கனி தீ விபத்து சம்பவத்துக்கு பிறகு இங்கு டிரெக்கிங் செல்ல கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

* மேகமலை அருவி:
தேனியில் உள்ள மற்றொரு முக்கிய சுற்றுலாதலம் மேகமலை அருவி. 'சின்ன சுருளி' அருவி என்றும் அழைக்கப்படும் மேகமலை அருவி கடமலை - மயிலை ஒன்றியத்தில் கோம்பைத்தொழு அருகில் அமைந்துள்ளது. இந்த அருவியில் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் வரத்து இருக்கும். கடுமையான கோடை காலத்தில் மட்டும் வறண்டு காணப்படும். தற்போது மழைக்காலம் என்பதால் இந்த அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
தேனியில் இருந்து 45 கி.மீ. தூரத்தில் இந்த அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு செல்ல ஒரு நபருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகன நிறுத்தத்திற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். வாகன பார்க்கிங் பகுதியில் இருந்து ஒரு கி.மீட்டர் துரம் அருவிக்கு நடந்து செல்ல வேண்டும். இங்கு நடந்து செல்லும் பாதையே சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இருக்கும். கோம்பைத்தொழு பகுதியில் இருந்து அருவிக்கு செல்ல பேருந்தும் உள்ளது.

* கும்பக்கரை அருவி:
தேனியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலையின் அடிவாரத்தில் இது அமைந்துள்ளது. இதனால், நீர் வரத்து எப்போதும் இருக்கும். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை குளிக்க அனுமதி உண்டு. ஒரு நபருக்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30, சிறுவர்களுக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது.
வனவிலங்குகள் நடமாட்ட அதிகம் இருக்கும் என்பதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். பெரிய குளம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பக்கரை அருவிக்கு பேருந்து மூலமாகவும் செல்ல முடியும்.

* சுருளி அருவி:
தேனியில் இருந்து 48 கி.மீ. தொலைவில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நீர்வரத்து அதிகம் இருக்கும். இந்த அருவியில் மலைப்பகுதிகளில் உள்ள மூலிகைகள் கலந்து தண்ணீர் கொட்டுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் தீர்க்கும் அருவியாக இது பார்க்கப்படுகிறது.
அருவிக்கு செல்வதற்கு தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி உண்டு. இங்கு ஒரு நபருக்கு நுழைவுக்கட்டணம் ரூ. 20 ஆகும். கம்பம், உத்தமபாளையத்தில் இருந்து சுருளி அருவிக்கு செல்ல பேருந்து வசதி உண்டு.
எங்கும் அழகு, எதிலும் பேரழகு என காணும் இடங்கள் எல்லாம் இயற்கையோடு இணைந்த சுற்றுலா இடங்களாக காணப்படும் இடமாக தேனி உள்ளது. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ரயில் வசதியும் உள்ளது.












Click it and Unblock the Notifications