பந்திப்பூர் முதுமலை வழியாக நள்ளிரவில் ஊட்டிக்கு திரில்லான திக் திக் பயணம் போக ஆசையா?
ஊட்டி: ஊட்டிக்கு திரில்லான திக் திக் பயணம் போக உங்களுக்கு ஆசை உள்ளதா.. அதுவும் நள்ளிரவில் அடர்ந்த காட்டிற்குள் வனவிலங்குகள் அதிகம் உள்ள பந்திப்பூர் முதுமலை வழியாக பயணிக்க விருப்பம் உள்ளதா.. அப்படி என்றால் இந்த செய்தியை நீங்கள் பாருங்கள்.
கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு ஊட்டிக்கு சுற்றுலா போக ஆசைப்படுவோர் மேட்டுப்பாளையம் போய் அங்கிருந்து நேரடியாக சில மணி நேரத்தில் போய்விடலாம். ஆனால் ஊட்டிக்கு திரில்லான நள்ளிரவு பயணம் வேண்டும். அதுவும் அடர்ந்த காடுகளான முதுமலை பந்திப்பூர் வழியாக திக் திக் மோடில் ஒரு நாளாவது பயணிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது என்றால் மட்டும் இதனை பாருங்கள். முதலிலேயேசொல்கிறோம். இது கொஞ்சம் ஆபத்தான பயணம். அதேநேரம் பயணிக்க விரும்புவோருக்கு வழி உள்ளது என்பதே தகவல்.. எப்படி என்பதை பார்ப்போம்.

பொதுவாக ஊட்டிக்கு செல்ல விரும்புவோர். கோவை அல்லது திருப்பூர் வழியாக மேட்டுப்பாளையம் போய் ஊட்டி போய்விடலாம். ஆனால் வித்தியாசமான பயணம் வேண்டும் என்று விரும்பினால், பெங்களுரூ போய், இரவு கிளம்பும் பேருந்தில் ஏறி மைசூர் வழியாக பயணிக்கலாம். இந்த ஒரே ஒரு பேருந்தில் மட்டும் சென்றால் நள்ளிரவில் தனி பேருந்தாக பந்திப்பூர், முதுமலை வழியாக ஊட்டிக்கு போக முடியும். இந்த ஒரு பேருந்து மட்டுமே நள்ளிரவில் பந்திப்பூர் முதுமலை வனப்பகுதியை தனியாக கடக்கும் என்பதால் திரில்லான அனுபவமாக இருக்கும். எதிரில் கூட எந்த வாகனமும் வராது. அதேநேரம் வனவிலங்குகள் சர்வ சாதாரணமாக வரும் என்பதே திரில்லின் உச்சம்.
சென்னையில் இருந்து கிளம்புவோர் பெங்களூர் போய் அங்கிருந்து மைசூர் சென்று ஊட்டி போக முடியும். எனவே பிற்பகலில் கிளம்பும் ரயிலில் ஏறினால், இரவு பெங்களூர் சென்று விடுவோம். அங்கிருந்து பஸ்ஸில் ஏறி ஊட்டிக்கு பஸ் ஏறுவதற்கு சாந்திநகர் பேருந்து நிலையம் வர வேண்டும். அங்கு இரவு 10.15 மணிக்கு ஊட்டி செல்லும் பேருந்து வரும். அதில் பேருந்தின் முன்னால் அமர்ந்து கொண்டால் அல்லது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தால், உங்களுக்கு பயணம் திக் திக் மோடில் நிச்சயம் இருக்கும்.
பெங்களூர் சாந்தி நகரில் இருந்து 10.30 மணிக்கு பேருந்து ஊட்டிக்கு புறப்பட்டு விடும். இந்த பேருந்து மைசூரை நள்ளிரவில் கடக்கும். அதிகாலையில் அதாவது இரண்டு மணிக்கு மேல் தான் பந்திப்பூர் முதுமலையை கடந்து செல்லும். இந்த வழியாக இரவில் காரில் அல்லது எந்த வாகனத்திலும் போக முடியாது.
ஏனெனில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை முதுமலை பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையை மூடிவிடுவார்கள். அதன்பின்னர் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அரசு பேருந்தும், ஒரே ஒரு கர்நாடகா பேருந்தும் தான் கடப்பதாக சொல்லப்படுகிறது. அந்த ஒரு பேருந்து தான் பெங்களூருவில் இருந்து ஊட்டி புறப்படும் பேருந்து ஆகும்.. நீங்கள் இரவு முழுவதும் கண் விழித்து பார்த்தால் தான் இந்த பயணத்தின் திரில்லை உணர முடியும்.
மைசூரை கடந்து குண்டல்பேட்டை தாண்டியதும் அதிகாலை 2 மணிக்கு பந்திப்பூர் சோதனை சாவடியை கடக்கும். அந்த சோதனை சாவடி மூடப்பட்டிருக்கும். இந்த ஒரு பேருந்துக்காக மட்டுமே திறப்பார்கள். வாகனம் பயணிக்க தொடங்கியதில் இருந்தே உங்களுக்கு சாலையின் முன்பு அல்லது சாலையை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் செல்வதை பார்க்க முடியும். அதிகாலை 3 மணி அளவில் எல்லாம் கர்நாடகா எல்லையை கடந்து முதுமலைக்கு சென்றுவிடுவீர்கள். மறுபடியும் சோதனை சாவடி இருக்கும். அங்கு அடுத்தடுத்து இரண்டு சோதனை சாவடிகள் இருக்கும். ஒன்று தமிழ்நாடு, ஒன்று கர்நாடகா. இரண்டும் மூடப்பட்டே இருக்கும். இரண்டு இடங்களிலும் உயிரை பணயம் வைத்து காவலர்கள் பணியாற்றுகிறார்கள்.
இங்கு இறங்கி கேட்டை திறந்த பின்னர் தமிழக எல்லையில் நுழையலாம். அங்கு யானை, புலி, மான், சிறுத்தை என எல்லா விலங்குகளும சர்வ சாதாரணமாக செல்வதை பார்க்க முடியும். உண்மையில் மிகவும் திரில்லான பயணமாக இருக்கும். விடியும் போது வண்டி ஊட்டியை அடைந்துவிடும். நிச்சயம் இந்த பயணம் திக் திக் அனுபவமாக இருக்கும்.. இதில் ஹைலைட் என்னவென்றால் டிரைவர் இரண்டு இடங்களில் இறங்க வேண்டும். அதேபோல் சோதனை சாவடியை திறக்க இறங்கி செல்ல வேண்டியதிருக்கும். வாகனங்களை அசலாட்டாக காட்டு யானைகள் வழிமறிக்கும். இதெல்லாம் இங்கு சர்வ சாதாரணமாக நடக்கும். எனவே எளிதான பயணமாக இருக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். காரில் நள்ளிரவில் செல்லவே முடியாது. அதிகாலை 6 மணிமுதல் தான் வாகனங்கள் செல்ல சாலையை திறப்பார்கள்.












Click it and Unblock the Notifications