Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெய்வமே என்ன இது.. ஒரே ஒரு உத்தரவு தான்.. கொடைக்கானலில் 8 கிமீ ஸ்தம்பித்த வாகனங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக கொடைக்கானல் சோதனை சாவடியில் இ-பாஸ் பரிசோதனை தீவிரமாக நடந்து வருகிறது. இ-பாஸ் சோதனை நடப்பதன் காரணமாக சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

'தங்குவதற்கு பல ஆயிரம் ரூபாய் பெற்று சுற்றுலா பயணிகளிடம் மோசடி நடைபெறுவதால், உரிமம் பெற்ற ரிசார்ட்டுகள், விடுதிகளின் விவரங்களை இ-பாஸ் விண்ணப்பத்தில் சேர்க்க முடியுமா? என்று ஊட்டி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பி இருந்தது. அதேபோல் இ-பாஸ் இல்லாமல் யாரும் ஊட்டி, கொடைக்கானலுக்குள் வரவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக இன்று கொடைக்கானலில் 8 கி.மீ. தூரத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

kodaikanal epass

முன்னதாக ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்க வேண்டும் என்றும், கோடை காலத்தில் இங்கு எத்தனை சுற்றுலா பயணிகள் வந்து செல்ல முடியும்? என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐ.ஐ.டி., பெங்களூரு ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக ஆஜரானார்கள். ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா பயணிகள் வந்தனர்? எத்தனை வாகனங்கள் வந்தன? என்பது உள்ளிட்ட விவரங்களை நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிக்கையாக தாக்கல் செய்தனர்.

அதை படித்து பார்த்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், "இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் தவறாக உள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா பஸ் 2 மட்டுமே வந்தது என்று கூறியுள்ளதை எப்படி ஏற்க முடியும்?, போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு சுற்றுலா பயணிகள் வந்ததாக செய்தி வெளியாகி இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, இதுபோன்ற தவறான தகவலை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும்போது, தவறான ஆய்வு முடிவு வெளியாகும் என்று கூறினார்கள்.

அதற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர், "பண்டிகை உள்ளிட்ட காலங்களில் ஊழியர்கள் விடுப்பில் சென்று விடுகிறார்கள். அதனால், சில குறைகள் இருக்கலாம். சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையை தானாக பதிவு செய்யும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அதன்பின்னர், முழுமையான புள்ளிவிவரங்கள் கிடைக்கும்" என்று விளக்கம் தந்தார்.

அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், "இப்போது பெரும்பாலானோரிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதனால், தொடு திரை எந்திரம் மூலம் இ-பாஸ் வழங்கும் முறையையும் அமல்படுத்தவேண்டும். இ-பாஸ் இல்லாமல் யாரும் ஊட்டி, கொடைக்கானலுக்குள் வரவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும்" என்று கூறினார்கள்.

மேலும் உத்தரவில் நீதிபதிகள் கூறும் போது, அங்கீகாரம் இல்லாத, முறையான உரிமம் இல்லாத தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் சுற்றுலா பயணிகளிடம் ஒருநாள் தங்குவதற்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வசூலித்து மோசடி செய்கின்றனர். அதனால், உரிமம் பெற்ற ரிசார்ட்டுகள், விடுதிகளில்தான் சுற்றுலா பயணிகள் தங்க போகின்றனர் என்பதை உறுதி செய்ய அதுகுறித்த விவரங்களை இ-பாஸ் விண்ணப்பத்தில் சேர்க்க முடியுமா? என்பதையும் பரிசீலித்து திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்'' என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற டிசம்பர் 2-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்நிலையில் நேற்று உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுப்படி இ-பாஸ் இல்லாமல் யாரும் ஊட்டி, கொடைக்கானலுக்குள் வரவில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக இன்று காலை முதலே ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் இபாஸ் உடன் வருகிறதா என்பதை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். இபாஸ் இல்லாதவர்களுக்கு உடனடியாக இபாஸ் வழங்கப்படுகிறது. அங்கேயே இதற்கான சிறப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனினும் இன்று சனிக்கிழமை என்பதால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த சூழலில் இபாஸ் சோதனை காரணமாக கொடைக்கானலின் நுழைவு வாயில் பகுதியான வெள்ளிநீர் வீழ்ச்சி பகுதியில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மெதுவாகவே வாகனங்கள் கொடைக்கானலுக்குள் செல்வதால், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+