தேனி டூ கொடைக்கானல் பைக்கில் போய் இருக்கீங்களா? இவ்வளவு த்ரில்லான பாதையா?
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு செல்ல வத்தலக்குண்டு, காட்ரோடு வழியாக செல்வது தான் பிரதான வழி. இது இல்லாமல் பழனி வழியாகவும் பெருமாள்மலையை அடைந்து கொடைக்கானல் போக முடியும். இந்த இரண்டு வழியை தவிர மூன்றாவதாக ஒரு வழி உள்ளது. அதுதான் பெரியகுளம், கும்பக்கரை அருவி வழியாக உள்ள அடுக்கம் பாதை.. அதில் உள்ள அற்புதமான திரில்லான பாதை பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் கொடைக்கானல் செல்ல காட்ரோடு அல்லது தேவனதானப்பட்டி போக தேவையில்லை. நேரடியாக கும்பக்கரை அருவி வழியாக அடுக்கம் கிராமத்தை அடைந்து அந்த வழியாக பெருமாள் மலைக்கு சென்று வழக்கம் போல் கொடைக்கானல் போக முடியும். தேனி மாவட்டம் வழியாக கொடைக்கானல் செல்பவர்கள் இந்த அடுக்கம் பாதை வழியாக சென்றால் 40 கிலோமீட்டர் குறைவு ஆகும். அதேநேரம் இந்த பாதை மிகவும் செங்குத்தானது. அதி அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட பாதையாகும்.

கொடைக்கானலில் இருந்து வருபவர்கள் கொடைக்கானலை நன்றாக சுற்றி பார்த்துவிட்டு பெருமாள் மலையை கடந்து வரும் போது, ஒரு செக்போஸ்ட் இடது புறம் வரும் இந்த சாலையில் பகலில் மட்டுமே வரலாம். இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடியும். இந்த பாதை நேரடியாக கும்பக்கரை வரை மலைப்பாதையாக இருக்கும். அதன்பிறகே சமதளமாக இருக்கும். அதேநேரம் இந்த பாதை மிகவும் செங்குத்தாக கீழே இறங்கும்.
அனுபவம் உள்ள டிரைவர்களே இந்த சாலையில் பயணிக்க முடியும். ஏனெனில் சாலை மிகவும் ஆபத்தானது. அதேநேரம் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலை திரில்லான அனுபவத்தை தரும். எனினும் இந்த சாலையில் பிற்பகல் 4 மணிக்கு மேல் எந்த காரணம் கொண்டும் பயணிக்கக்கூடாது.. ஏனெனில் மாலை 6 மணிக்கு அளவில் எல்லாம் சர்வ சாதாரணமாக காட்டு மாடுகளை பார்க்க முடியும். அதேபோல் வனவிலங்குகளையும் மாலை நேரத்திற்கு பிறகு பார்க்க முடியும்.
பெருமாள் முதல் பெரியகுளம் வரை முழுக்க முழுக்க காடுகள் இருந்தாலும்.. விவசாய நிலங்கள் அதிகம். வழிநெடுகிலும் மலை வாழை மரங்களையும், திரில்லான பாதையையும் காண முடியும். அதேபோல் அவகோடா இந்த சாலையில் தான் அதிகமாக இருக்கும். ஆரஞ்சு, பிளம்ஸ் பழங்களும் அதிகமாக இருக்கும்.. நிறைய பழா மரங்களையும், நம்பவே முடியாத ஆச்சரியமான இடங்களையும் போகும் வழியில் பார்க்க முடியும். கொடைக்கானலில் இருந்து பெருமாள் மலை தாண்டி, சாமக்காடு, அடுக்கம் வரை விவசாய தோட்டங்கள் இருக்கும்..
அதன்பிறகே வனப்பகுதிகள் ஆரம்பிக்கும். இந்த பாதையில் அடிக்கடி மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படும்.. இந்த பாதையில் இருசக்கர வாகன ஓட்டிகள் பயணித்தால் திரில்லான அனுபவத்தை பெறலாம்.. கொடைக்கானலில் இருந்து பயணித்து கும்பக்கரை அருவிக்கு வந்து குளிக்க இதுதான் மிகவும் சாகசமான பாதையாக இருக்கும்.. அதேநேரம் பாதையின் நிலை எப்படி இருக்கிறது... அங்குள்ள மக்களிடம் விசாரித்துவிட்டு செல்வது பயனுள்ளதாக இருக்கும்.
மலையில் இருந்து இறங்கி கும்பக்கரை அருவி வந்துவிட்டால், அங்கிருந்து பெரியகுளம் வரை மாமரங்கள், தென்னை மரங்களை வழிநெடுகிலும் காணலாம். வெயில் என்பதையே பெரியகுளம் நகருக்கு வந்தால் தான் பார்க்க முடியும். இந்தகோடையில் திரில்லான பயணத்தை விரும்புவோர் பயணிக்கலாம். அதே நேரம் சிக்கலான பாதை என்பதால் மிக மிக கவனமாக செல்ல வேண்டும். இல்லாவிட்டால் தேவதானப்பட்டி தாண்டி காட்ரோடு வழியாக செல்வது மிகவும் நல்லது.












Click it and Unblock the Notifications