தமிழ்நாட்டின் சுவிட்சர்லாந்து.. பல திரைப்படங்கள் எடுத்த இடம்.. ஒருமுறையாவது போக வேண்டிய மலை கிராமம்
கொடைக்கானல்: இந்த இடத்தை தமிழ்நாட்டின் சுவிட்சர்லாந்து என்று சொல்லலாம். வாழ்வில் ஒருமுறையாவது போக வேண்டிய இடம் என்று யாருக்காவது டேக் செய்ய நினைத்தால் தாராளமாக இந்த இடத்தை கூறுங்கள். கொடைக்கானல் பக்கத்தில் உள்ள இந்த இடத்தில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
கொடைக்கானல் என்பது சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருக்கிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாத அளவிற்கு ஸ்தம்பிக்கும். கொடைக்கானல் என்பது மற்ற சுற்றுலா தலங்களை போல் இல்லை. முழுமையாக இயற்கை அப்படியே இருக்கும் சுற்றுலா தலம் ஆகும்.

மூணாறு, ஊட்டி போல் இங்கு தேயிலை தோட்டங்களை காண முடியாது. அதேபோல் கழுகு பார்வை மூலம் அடுக்கு சாலைகளை முடியாது. ட்ரோன் வியூ எடுத்தாலும் எல்லா சாலைகளையும் மரங்கள் மறைத்துக் கொள்ளும். ஊட்டி, மூணாறு, போடி மெட்டு போல்,எந்த இடத்திலும் கொடைக்கானல் மலைச்சாலையை முழுமையாக காண முடியாது. அவ்வளவு அழகாக மலையில் சாலைகளை மரங்கள் மறைத்திருக்கும். சாலையின் இருபுறமும் அடர் வனமாக இருக்கும்.
கொடைக்கானல் போகும் போது இப்படி என்றால், கொடைக்கானல் மலை மேல், நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக், பூங்கா, பூம்பாறை கிராமம், குழந்தை வேலப்பர் கோயில், பசுமை பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட், பைன்மரக்காடு, பில்லர் ராக், குணா பாறை, சர்ச், கோயில், வெள்ளி நீர் வீழ்ச்சி, பேரிஜம் ஏரி, மன்னவனூர், கூக்கால் என ஏராளமான இடங்கள் சுற்றுலா பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும்.
இதில் மன்னவனூர் கிராமம் பார்க்க தமிழ்நாடு போலவே இருக்காது. தமிழ்நாட்டின் சாயல் சுத்தமாக இல்லாமல் சுவிட்சர்லாந்து போல் இருக்கும். அங்குள்ள சாலைகள் மிக அமைதியான சாலைகள் ஆகும். கொடைக்கானலில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மன்னவனூரில் உள்ள ஆட்டுப்பண்ணை உலகப் புகழ் பெற்றது. மேலும் மன்னவனூர் ஏரி, அங்கு உள்ள சாகச பயணம், புல்வெளிகள், தட்ப வெப்பநிலை வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வை தரும்.

மன்னவனூர் ஏரிக்கு மேல் சுமார் 250 மீட்டர் உயரத்தில் கம்பி வடத்தில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்யும் வகையில் ஜீப் லைன் சாகசம் அமைக்கப்பட்டிருக்கிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.மலைப்பாதைகளில் அடுக்கடுக்காக காணப்படும் விவசாய நிலங்கள், மேகம் தவழும் ரம்மியமான சூழல் பலருக்கும் பிடிக்கும்.
மன்னவனூரில் ஏராளமான சினிமா திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் திரைப்படம் அங்கு தான் எடுக்கப்பட்டது. கார்த்தி நடித்த பையா மற்றும் விருமன் , மோகன்லால் நடித்த இருவர், மம்முட்டி நடித்த பேரன்பு, சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், சூர்யா நடித்த ஆதவன், தனுஷ் நடித்த குட்டி உள்பட பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் போனால் கண்டிப்பாக மன்னவனூரை மிஸ் பண்ணிடாதீங்க..












Click it and Unblock the Notifications