வாகமன் மூணாறு சுற்றுலா தலங்களை விட சூப்பர் கிளைமேட்.. கோடைக்கு ஏற்ற தமிழ்நாட்டு சுற்றுலா தலங்கள்
கொடைக்கானல்: கடவுளின் தேசமான கேரளாவின் வாகமன், மூணாறு வயநாட்டை விட தமிழ்நாட்டில் உள்ள கோடைவாசஸ் தலங்களில் தான் வெயில் தற்போது குறைவாக இருக்கிறது.. தமிழ்நாட்டிலேயே குறைவான வெப்ப நிலை ஊட்டியிலும் அதற்கு அடுத்தபடியாக கொடைக்கானலிலும் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் கொழுக்குமலையின் வெப்பநிலை குறைவாக உள்ளது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 14 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக கரூரில் - 106.7 டிகிரி (41.5 செல்சியஸ்), ஈரோடு - 106.52 டிகிரி (41.4 செல்சியஸ்), திருச்சி - 105.08 டிகிரி (40.6 செல்சியஸ்), வேலூர் - 104.9 டிகிரி (40.5 செல்சியஸ்), தர்மபுரி - 104 டிகிரி (40 செல்சியஸ்), மதுரை - 103.46 டிகிரி (39.7 செல்சியஸ்), சேலம் - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்), நாமக்கல் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்), திருத்தணி - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ், கோவை - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்), திருப்பத்தூர் - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்), சென்னை மீனம்பாக்கம் - 100.94 டிகிரி (38.3 செல்சியஸ்), தஞ்சாவூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்), தொண்டி - 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகி இருந்தது.

கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.. பலர் வெயிலில் இருந்து தப்பிக்க கோடைவாசஸ் தலங்களை நோக்கி படை எடுக்கிறார்கள்.. ஆனால் கோடைவாசஸ் தலங்களுமே வெயிலுக்கு தப்பவில்லை.. கேரளாவின் மூணாறில் இன்று மதியம் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் என்று இருக்கிறது. வாகமனில் 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கிறது. வயநாட்டில் 32 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கிறது. சமவெளியில் உள்ளது போன்ற வெப்ப நிலை இருப்பதால் கேரள மக்கள் தவிக்கிறார்கள்.. நல்லவேளையாக அங்கு மரங்கள் காடுகள் அதிகமாக இருப்பதால் வெயிலை ஓரளவு சமாளிக்கிறார்கள்..
தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த கோடைக்கு ஏற்ற சிறந்த சுற்றுலா தலம் என்றால் அது ஊட்டி தான்.. ஊட்டியில் தற்போது மிகவும் குறைவான வெப்ப நிலை இருக்கிறது. ஊட்டியில் இன்று அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சமாக 14 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கிறது. ஊட்டியில் உள்ள வெப்பநிலை இமயமலையில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு நிகராக குறைவான வெப்ப நிலைஇருக்கிறது. ஊட்டியில் அதிகாலையில் எழுந்து நடுங்கி கொண்டே சென்று பனியில் காபி குடிப்பது சுகமான அனுபவமாக இருக்கும்.. சென்னை மக்களுக்குதான் ஊட்டியின் அருமை நன்றாகவே தெரியும்..

ஊட்டிக்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் வெப்பநிலை மிக குறைவாக உள்ளது. கொடைக்கானலில் அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சம் 16 டிகிரி செல்சியஸ் ஆகவும் இன்றைய வெப்ப நிலை, மழைக்கான வாய்ப்பு நாளை இருப்பதாக வானிலை நிலவரங்கள் காட்டுகின்றன. இந்த சனி மற்றும் ஞாயிறு ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கும்..

அதற்கு அடுத்தபடியாக தேனிமாவட்டம் கொழுக்குமலையில் வெப்பநிலை மிக குறைவாக இருக்கிறது. கொழுக்குமலையில் அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சம் 15 டிகிரி செல்சியஸ் ஆகவும் உள்ளது. கொழுக்குமலையில் இரவில் தங்கி அதிகாலையில் சூரிய உதயத்தை காணுவது சொர்க்கத்தில் இருக்கும் அனுபவத்தை தரும்..

இதற்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வெப்பநிலை குறைவாக உள்ளது. ஏற்காட்டில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் ஆகவும் உள்ளது. இந்த வெப்பநிலை சமவெளிக்கு நிகரான வெப்ப நிலை என்கிற போதிலும், சமவெளியின் இப்போதைய நிலவரத்தை ஒப்பிடும் போது ஓரளவு வெயில் குறைவாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications