சென்னை முட்டுக்காட்டில் தமிழகத்தின் முதல் மிதக்கும் கப்பல் உணவகம்! பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
சென்னை: சென்னையில் முட்டுக்காடு படகு குழாமில் அமைக்கப்பட்டு வரும் தமிழகத்தின் மிதக்கும் சொகுசு கப்பல் உணவகம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது முட்டுக்காடு. இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இவர்களுக்காக மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இடத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் முட்டுக்காட்டில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் முட்டுக்காடு வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ரூ 5 கோடி மதிப்பிலான மிதக்கும் உணவக கப்பல் உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இந்த கப்பல் உணவகம் 125 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில் இரு அடுக்குகள் உள்ளன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், கொச்சியை சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.
முதல் தளம் திறந்தவெளி தளமாகவும் மேல் தளத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டே இயற்கையை கண்டு களிக்கும்படியும் வடிவமைக்கப்படுகிறது. மேல் தளத்தில் அமர்வதற்கான இருக்கை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சமையலறை, சேமிப்பு அறை, கழிவு அறை, இயந்திர அறை உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த கப்பல் உணவகம் இன்னும் 2 மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் முதல் மிதக்கும் கப்பல் உணவகம் என்ற பெருமையை இந்த கப்பல் பெறுகிறது. இந்த கப்பல் உணவகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். பணிகளும் விரைந்து முடிக்கப்படுகிறது. அது போல் இந்த கப்பல் உணவகத்தில் சாப்பிடுவதற்காக எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications