ஆஹா.. என்ன அழகு! திருச்சி பக்கம் இப்படி ஒரு இடமா.. சொர்க்கம்யா! புளியஞ்சோலைக்கு உடனே வண்டிய விடுங்க
திருச்சி: தமிழ்நாட்டின் இதயமாக கருதப்படும் மத்திய மாவட்டமான திருச்சியை சுற்றி ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில், உங்கள் வார விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க ஒரு சூப்பரான இடம் இருக்கிறது. வாங்க.. எழுத்தின் வழியாக ஒரு எட்டு அந்த பகுதிக்கு போயிட்டு வருவோம்.
தமிழ்நாட்டின் முக்கிய மாநகராட்சியாகவும், மத்திய மாவட்டமாகவும் திருச்சி உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மண்டலங்களையும், பல மாவட்ட எல்லைகளையும் திருச்சி பகிர்ந்துகொண்டு உள்ளது. வட மாவட்டங்களில் பெரம்பலூர், அரியலூருடனும், கொங்கு மண்டலத்தில் சேலம், நாமக்கல், கரூருடனும் திருச்சி எல்லையை பகிர்கிறது.

தென் மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டையையும், டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூருடனும் எல்லையை பகிர்ந்து இருக்கிறது திருச்சி மாவட்டம். எனவே திருச்சியில் இருந்து தமிழ்நாட்டில் எந்த ஒரு பகுதிக்கும் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் குறைவான நேரத்துக்குள் சென்று வந்துவிடலாம். அதேபோல் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளேயும் ஏராளமான சுற்றுலா தளங்களும் இயற்கையை அள்ளித்தரும் இடங்களும் உள்ளன.
அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இடம்தான் புளியஞ்சோலை. சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகரித்துவிட்டதால் குற்றாலம் உள்ளிட்ட பல அருவிகளும், இயற்கை தளங்களும் செயற்கைகளால் நிரம்பிவிட்ட நிலையில் இன்னும் இயற்கை அழகு மாறாமல் காடும், மலையும், அருவியும், நீரோடையும் கொண்ட அழகிய பகுதிதான் புளியஞ்சோலை.

பெயருக்கு ஏற்றார்போலவே அது ஒரு சோலைதான். கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளால் நிரம்பி இருக்கும் திருச்சியில் வாழும் மக்கள் ஒருநாள் நகர பரபரப்புகளுக்கு விடைகொடுத்துவிட்டு ஜாலியாக புளியஞ்சோலைக்கு ஒரு ட்ரிப் சென்று வரலாம். மலையேற்றம் செல்ல பிடிக்கும், ஆனால் பயமாக இருக்கிறது என்று சொல்பர்கள் புளியஞ்சோலைக்கு வந்தால் எளிதில் மலையேறலாம். அது ஒரு பயிற்சியாகவும், அழகிய அனுபவமாகவும் அமையும்.
ஒரு காட்சியை கற்பனை செய்துகொள்ளுங்கள். "மேற்கு திசையில் ஒரு பெரிய மலை. மாலை வேளையில் அதில் எட்டிப்பார்க்கும் சூரியன். மலை உச்சியில் இருந்து கொட்டும் அருவி அப்படியே தரையில் பட்டு, நீரோடையாகவும், ஆறாகவும் பாறைகளுடன் மல்லுக்கட்டி ஓடுகிறது. கண்ணாடி போன்ற தண்ணீர். கண்களுக்கு தெரியும் குட்டி குட்டி மீன்கள். அவை கால் விரல்களுக்கு புகுந்து விளையாடுகின்றன. திரும்பும் திசையெங்கும் பச்சை பசேலென்ற மரங்கள். ஆங்காங்கே அடுக்கடுக்கான மலைக் குன்றுகள்." நினைத்தாலே பரவசம் வருகிறதல்லவா?

இந்த கற்பனையை நிஜமாக்க நீங்கள் புளியஞ்சோலைக்கு நிச்சயம் செல்ல வேண்டும். கொல்லி மலையின் அடிவாரமான புளியஞ்சோலையை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளன. இங்குள்ள மலைக் குன்றுகளின் மீது எளிதில் ஏறி அமரலாம். விளையாடலாம். அதை தாண்டி பித்துக்குளி குகைக்கு நடந்து சென்று சுகத்துடன் சுவாரஸ்யத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம். இதன் அருகிலேயே தங்குமிட வசதிகளும் உண்டு.
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் இருந்து புளியஞ்சோலை செல்ல 27 கிலோ மீட்டர் தொலைவாகும். திருச்சியில் இருந்து துறையூருக்கு ஏராளமான பேருந்துகள் செல்கின்றன. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுமார் 79 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த புளியஞ்சோலை அமைந்து உள்ளது. செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை புளியஞ்சோலையின் அழகை முழுமையாக அனுபவிக்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications