சென்னை டூ தாய்லாந்து.. கம்பெனியே கூட்டிச்சென்ற வெளிநாடு டூர்.. ஆசையாய் போனவருக்கு இப்படியா ஆகணும்
சென்னை: இன்றைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். தாய்லாந்தை பொறுத்தவரை மிகப்பெரிய அளவில் சுற்றுலாவை பொருளாதாரமாக கொண்ட நாடு, திருவிழா கூட்டத்தில் நுழைந்தால் எப்படி இருக்குமோ.. அப்படித்தான் தாய்லாந்து நாடே இருக்கும். அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அப்படித்தான் சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற தனியார் நிறுவன அதிகாரி, ஆழ்கடலில் வண்ண மீன்களை பார்க்க சென்றார். என்ன நடந்தது தெரியுமா? பார்ப்போம்.
தாய்லாந்தை பொறுத்தவரை இந்தியர்கள் அதிக அளவில் சுற்றுலா செல்கிறார்கள். தாய்லாந்து அரசும் இந்தியர்களை கவர விசா-ஆன்-அரைவல் வசதியை தருகிறது. விசா பெறுவதற்கு முன்பே திட்டமிட வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால் எளிதாக தாய்லாந்துக்கு டிக்கெட் போட்டு போய்வர முடியும். அதேபோல் தாய்லாந்தை பொறுத்தவரை மிகவும் குறைந்த செலவில் பயணிக்கக்கூடிய நாடு என்பதால் பலரும் விரும்புகிறார்கள்.

வெறும் 4 மணி நேரத்தில் தாய்லாந்து
தாய்லாந்திற்கு வெறும் 4 மணி நேரத்தில் இந்தியாவின் எங்கிருந்தும் போய்விட முடியும். மிக அழகான கடற்கரைகள் உள்ளன.பட்டாயா மற்றும் பாங்காக் என்பது பேச்சுலர்களின் சொர்க்கபுரியாக பார்க்கப்படுகிறது.அதனால் பலரும் செல்கிறார்கள். அதேபோல் குடும்பங்களும் பலர் அழகான சுற்றுலா தலங்களை ரசிக்க செல்கிறார்கள். அப்படி சென்ற சென்னையைச் சேர்ந்தவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம். .
சேத்துப்பட்டு தனியார் நிறுவனம்
சென்னை ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோவில் மெயின் தெருவைச் சேர்ந்த 43 வயதாகும் திவாகர் என்பவர், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார்.
தாய்லாந்து சுற்றுலா
சேத்துப்பட்டில் திவாகர் வேலை செய்யும் நிறுவனத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு சுற்றுலா அழைத்துச்செல்வது வழக்கம் ஆகும். அதன்படி இந்த ஆண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் 60-க்கும் மேற்பட்டோரை தாய்லாந்துக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்கள். இதற்காக கடந்த 15-ந் தேதி இரவு திவாகர், தனது நிறுவன ஊழியர்களுடன் தாய்லாந்துக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றிருக்கிறார்.
ஆழ்கடலில் வண்ண மீன்கள்
இந்தநிலையில் கடந்த 20-ந் தேதி திவாகரின் வீட்டுக்கு அவர் வேலை செய்யும் நிறுவன அதிகாரிகள் வந்து, தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற திவாகருக்கு, அங்கு ஆழ்கடலில் வண்ண மீன்கள் மற்றும் கடற்பாறைகளை பார்க்க சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே கடற்பயிற்சி படையினர் அவரை வெளியே கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி திவாகர் இறந்துவிட்டதாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்ததாக கூறியிருக்கிறார்கள்.
சென்னைக்கு கொண்டுவர நடவடிக்கை
அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த திவாகரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்களை சமாதானம் செய்து வைத்த தனியார் நிறுவன அதிகாரிகள், திவாகரின் உடலை தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாக உறுதி அளித்தனர்.
தாய்லாந்து நாட்டில் இருந்து திவாகரின் உடல் சென்னைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆழ்கடலில் மீன்களை பார்க்க செல்வோர், கவனமாக இருக்க வேண்டும். மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்தால் சிக்கல் ஆக வாய்ப்பு உள்ளது. ஒரு சில நேரங்களில் எதிர்பாராத விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும்.எனவே அதிகாரிகளின் அறிவுறுத்தலை முறைப்படி கடைபிடிப்பது தான் நல்லது.












Click it and Unblock the Notifications