கடவுளின் தேசமல்ல தேனி.. உண்மையில் கடவுளே வாழ விரும்பும் பூமி.. கண்ணீர் கதையை கேளுங்க
தேனி: விவசாயம் செய்பவர்கள் வீதியிலும்.. விவசாயத்தை கைவிட்டவர்கள் விமானத்திலும் போவது தான் எதார்த்தமாக உள்ளது. முப்போகம் விளையும், இயற்கை வளங்களை அள்ளி வைத்திருக்கும் தேனியில் எந்த தொழிற்சாலைகளோ, வேலைவாய்ப்புகளோ உருவாகாத நிலை பல ஆண்டுகளாக இருக்கிறது.
கடவுளின் தேசமல்ல தேனி.. உண்மையில் கடவுளே வாழ விரும்பும் பூமி என்று சொல்லலாம் . மத்திய கேராளவின் நுழைவு வாயிலாக உள்ள தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியாகும். கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, இடுக்கி அணை, வாகமன் போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்லும் நுழைவு வாயிலாக உள்ளது. சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் முக்கியமான வழியாகவும் தேனி தான் இருக்கிறது.

தேனி மாவட்டம் என்பது முப்போகமும் விளையும் பூமி. முல்லை பெரியாறு நதியும், வைகை நதியும், வராக நதியும், கொட்டைக்குடி ஆறும், மஞ்சாளாறும் பாயும் ஊரு. இதில் முல்லை பெரியாறு ஒரு காலமும் வற்றாது. எப்போதும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். எத்தனை அருவிகள் உள்ளது என்று என்னவே முடியாது.. சென்னையில் இருந்து தேனிக்கு முதல் முறையாக போகிறவர்கள் பார்த்தால், பார்க்கும் அத்தனையும் சுற்றுலா தளமாகவே தெரியும். அவ்வளவு அழகை கொண்ட பூமி தேனி. மொத்த தமிழ்நாட்டிற்கும் அதிக அளவில் பூண்டு, ஏலக்காய், செங்கரும்பு, திராட்சையை அனுப்புவது தேனி தான். பல சினிமா பிரபலங்கள் பிறந்த ஊர். இளையராஜா தொடங்கி பாரதிராஜா, வைரமுத்து, தனுஷ், செல்வராகவன், இயக்குனர் பாலா என பலரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
விவசாயத்தை தாண்டி தேனி மாவட்டத்தில் எதுவே இல்லை. இரண்டு மூன்று தொழிற்சாலைகளை தாண்டி, தொழில் என்று எதுவுமே இல்லை.. இதனால் பலர் சென்னைக்கும், திருப்பூருக்கும், கோவைக்கும் வேலை தேடி பயணிக்கும் நிலை இருக்கிறது. விவசாயத்தை கைவிட்டுவிட்டு தொழிற்சாலைகளுக்கு , ஐடி நிறுவனங்களுக்கு வேலைக்கு போனவர்கள் விமானத்தில் போகிறார்கள். ஆனால் விவசாயத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் மக்கள், கூலித்தொழிலாளியாக கேரளாவிற்கு ஜீப்களில் கூலிகளாக பயணித்து கொண்டிருக்கிறார்கள். கம்பத்திலும், போடியிலும் ஜீப்பில் போய் தேயிலை, ஏலக்காய் பறிப்பது தான் வேலையாக உள்ளது.
தேனி மாவட்டத்தில் ஒருபாதி மக்கள் தேயிலை, ஏலக்காய் பறிப்பதை வேலையாக செய்கிறார்கள். இன்னொரு பாதி மக்கள், விவசாயம் மட்டுமே செய்கிறார்கள். ஆண்டிப்பட்டியில் நெசவு தொழிற்சாலைகளை மேம்படுத்தி இருந்தால், இந்நேரம் இங்குள்ள மனித வளத்திற்கு, கோவை சோமனூரை போல் மிகப்பெரிய அளவில் தொழிற்சாலைகள் வளர்ந்திருக்கும். ஆனால் அப்படி வளரவில்லை.. அப்படியே சுருங்கி கிடக்கிறது. தேனியில் இரண்டு மூன்று தொழிற்சாலைகளை தவிர ஒன்றுமே இல்லை.. பெரியகுளத்தில் அதுவும் இல்லை.
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை கொஞ்சம் பணம் வைத்துள்ளவர்கள் வட்டிக்கு விடுகிறார்கள்.. மற்றவர்கள் அன்றாட தேவைக்கு கூட வட்டிக்கு வாங்கி வாழ்கிறார்கள். தேனியை பொறுத்தவரை விவசாய கூலி தான் பிரதான வேலையாக உள்ளது. கூலி வேலை செய்யும் மக்களில் பலர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, அன்றாடு சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை டாஸ்மாக் கடைக்கு கொடுத்து விட்டு, அரசின் ரேஷன் அரிசியை வாங்கி வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.
எந்த தொழிலும் இல்லாதது தேனி மாவட்ட மக்களின் குற்றம் அல்ல, அதேபோல் தேனியில் உள்ள மக்கள் வேலை கிடைக்காமல் அல்லாடுவதற்கு காரணம் அவர்கள் அல்ல.. இதுவரை ஆண்ட ஆட்சியாளர்கள் தான் காரணம். அவர்கள் நினைத்திருந்தால் சுற்றுலா சார்ந்த, விவசாயம் சார்ந்த பல தொழில் முதலீடுகளை கொண்டு வந்திருக்க முடியும். இன்று வரை நடக்கவில்லை.. சென்னையை சுற்றி குவியும் முதலீடுகளில் கொஞ்சம் கொண்டு வந்திருந்தாலும், தென்மேற்கு பருவ காற்று வீசும் தேனியில், நிஜமாகவே தென்றல் காற்றும் வீசியிருக்கும்..












Click it and Unblock the Notifications