களத்தில் 6 ஹெலிகாப்டர்கள்.. 10,082 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.. தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பரபர தகவல்!
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் குறித்து தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி அளித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக அதி கனமழை பெய்தது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து தாதன்குளம் அருகே கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தின் கீழ் இருந்த தரைப்பகுதி முழுவதுமாக அரித்துச் செல்லப்பட்டது. இதனால் தண்டவாளம் எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகிறது. இதனால், டிசம்பர் 17ஆம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது.

அதேசமயம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் பகுதி முழுக்க வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பயணிகளை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது. சுமார் 300 பயணிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இன்னும் 200 பயணிகளை மீட்க வேண்டி உள்ளது. ரயில் நிலையத்தில் இரண்டு நாளாக சிக்கித் தவிக்கும் பயணிகளை மீட்கும் பணி ஹெலிகாப்டர் மூலம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெள்ள மீட்பு பணிகள் குறித்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், "நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 550 வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது. தூத்துக்குடியில் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகிக்கப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நெல்லை, தூத்துக்குடியில் தலா 275 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு பணிகளில் பயிற்சி பெற்ற 100 பேர் களமிறங்கி உள்ளனர். 168 ராணுவ வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஹெலிகாப்டரில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை சூலூர், மதுரை விமான நிலையங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன. 2 நாட்களில் 4 மாவட்டங்களில் 10,082 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொலைத்தொடர்பு பிரச்சனை நீடிக்கிறது. அப்பகுதிகளில், 1,700 தொலை தொடர்பு கோபுரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் தொலை தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை வயர்லெஸ் மூலமாக அப்பகுதிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications