சம்பவம் செய்ய போகும் வானிலை.. சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கொட்டும் மழை
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்கள் அதற்கேற்ப தங்கள் திட்டங்களைப் போட்டுக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழையால் நல்ல மழை கிடைத்து வருகிறது. தென்கிழக்கு பருவமழை காலத்தில் நமக்குப் பெரிதாக மழை இல்லாமல் பொய்த்து போன நிலையில், வடகிழக்கு பருவமழையால் நல்ல மழை கிடைக்கிறது.

இதன் காரணமாக மாநிலத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னையில் கடந்த சில நாட்களாகவே தினசரி நல்ல மழை பெய்து வருகிறது.
அடுத்த 3 மணி நேரம்: இதற்கிடையே இன்று மாலை தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்கள் மாலை தங்கள் திட்டங்களை இதற்கேற்ப வகுத்துக் கொள்ளவும்.
அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசனாது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மழை: அதேபோல தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அதற்கேற்ப தங்கள் திட்டங்களை வகுத்துக் கொள்ளவும்.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது தினசரி செய்திக்குறிப்பில், நேற்று (15-11-2023) மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (16-11-2023) காலை 05:30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 08:30 மணி அளவில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.
எங்கெல்லாம் மழை: இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, 18-ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையை மோங்க்லா - கேப்புபாராவிற்கு இடையே கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை (நவ. 17) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications