இன்று 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் தகித்த வெப்பம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியிருக்கிறது. கடந்த சில நாட்களாக ஈரோடு, சேலத்தில் அதிக அளவு வெயில் பதிவாகி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்பை எதிர் கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வெயில் கடுமையாக இருக்கிறது. 2023ல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வழக்கத்தை விட வெயில் தீவிரமாக இருந்தது. குறிப்பாக கேரளாவில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்ததால், நீர் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது. கர்நாடகாவில் முக்கிய அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்தின் மேட்டூருக்கு உரிய நீர் கிடைக்கவில்லை.

தமிழகத்தை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வெயிலின் தீவிரம் குறையவில்லை.
இன்று மட்டும் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவும், அதற்கடுத்தபடியாக திருப்பத்தூரில் 106.88, சேலத்தில் 106.7 என வெயில் வாட்டி எடுத்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக கரூர் பரமத்தி மற்றும் தருமபுரியில் 105.8, திருத்தணியில் 104.72, வேலூரில் 104.54, திருச்சியில் 104.18, நாமக்கல்லில் 104, மதுரை விமான நிலையம் மற்றும் கோவையில் 102.56 டிகிரி ஃபாரன்ஹீட் என வெயில் கொளுத்தியிருக்கிறது.
இன்று மதியம் வெளியான வானிலை அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான வெயிலின் அளவு குறித்து விவரிக்கப்பட்டிருந்தது. அதாவது நேற்று தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகியிருக்கிறது. கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. 9 இடங்களில் வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், ஈரோட்டில் 42.2 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8°, சேலத்தில் 41.7°, கரூர் பரமத்தியில் 41.5°, தர்மபுரியில் 40.7°, நாமக்கல்லில் 40.5°, திருச்சியில் 40.2°, திருத்தணி மற்றும் வேலூரில் 40.0° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38°-40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° - 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22° -30' செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 36.8° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.2° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு நாட்களை பொறுத்த அளவில், தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று முதல் ஏப்.29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications