இன்னும் ஆட்டம் இருக்கு! மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக போகுதாம்.. பாலச்சந்திரன் அலர்ட்
சென்னை: வரும் 15 ஆம் தேதிவாக்கில் அந்தமான் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த பிறகு மீண்டும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலையில் பெய்ய தொடங்கிய மழை தற்போது வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதேபோன்று தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசியிலும் தற்போது வரை மழை பெய்து வருகிறது.

பாலச்சந்திரன் பேட்டி:
இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், அந்தமான் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
* தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் கோடியக்கரையில் 14 செமீ மழை பெய்துள்ளது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும்.
அதிகனமழைக்கு சான்ஸ்:
* அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* அடுத்த வரும் 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இயல்பைவிட அதிக மழை:
* நாளை தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
* வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் தற்போது வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம், புதுவை, காரைக்காலில் 47 செமீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 16 சதவீதம் அதிகமாகும்.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:
* தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த பிறகு மீண்டும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
* ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலு குறையும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததும் படிப்படியாக மழையும் குறையும்.
* அந்தமான் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. வரும் 15 ஆம் தேதிவாக்கில் அந்தமான் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
வானிலை கணிப்பு:
*ஃபெஞ்சல் புயல் திசையை சரியாக தான் கணித்தோம். ஆனால் திறனில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. உலகம் முழுக்கவே வானிலை கணிப்புகளில் தவறுகள் ஏற்படத்தான் செய்கின்றன.
* குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அட்லாண்டிக் கடல் பகுதியில் புயல் கரையை கடந்த போது கணிப்புகள் தவறி இருந்தது.
* காலநிலை மாற்றம் காரணமாக வானிலை நிலவரங்களை துல்லியமாக கணிப்பதில் சிக்கல் உள்ளது. வானிலை கணிப்புகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். தொழில்நுட்பம் மட்டுமின்றி புயலை கணிக்கும் அறிவியல் அம்சமும் முழுவமையாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications