ஹாட் ஸ்பாட் இதுதான்.. இங்கெல்லாம் பிச்சு உதறப்போகுது மழை.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அலர்ட்
சென்னை: தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு நடுவே திடீரென மழை பெய்து மக்கள் மனதை குளிர வைத்து வருகிறது. இன்றும் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ள நிலையில், தமிழகத்தின் உள்மாவட்டங்கள் வழியாக மழை செல்லும் எனவும் பெங்களூர்தான் மீண்டும் மழைக்கான ஹாட்ஸ்பாட்டாக உள்ளது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டதோ என்று சொல்லும் அளவுக்கு வெயில் அனைலை கக்கி வந்தது. வெளியில் சென்றாலே வியர்த்து கொட்டும் நிலை இருந்தது. இந்த சூழலில் தான் கொஞ்சம் கருணை காட்டிய வருண பகவானால், தமிழகத்தில் ஆங்காங்கே மழை கொட்டியது. இதனால் அனலென தகித்த தமிழகம் கொஞ்சம் குளிர்ந்தது. மக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

8 மாவட்டங்களில் கனமழை
இதிலும் கடந்த இரண்டு நாட்களாக வெயிலும் மழையும் மாறி மாறி அடித்து வருகிறது. இன்று தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில், மதிய நேரங்களில் வானம் மேகமூட்டத்துடனும், ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது. விழுப்புரம், கொடைக்கானல், நீலகிரி, தென்காசி, குமரி, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. மதியம் 2 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை கொட்டியது.
இன்றும் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. அதே போல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியிருந்தது.
தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்
இந்த நிலையில் மீண்டும் மேற்கு தமிழ்நாட்டில் தான் மழை வெளுத்து எடுக்க போகிறது என்றும், மீண்டும் பெங்களூர் தான் ஹாட்ஸ்பாட் ஏரியா என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட் பதிவிட்டுள்ளார். பிரபல தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- "மீண்டும் மேற்கு தமிழ்நாட்டில் அதே பாதையில் தான் மழை செல்கிறது..
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய உள் மாவட்டங்கள் வழியாக தான் மழை செல்கிறது. மழைக்கான ஹாட்ஸ்பாட் ஆக மீண்டும் பெங்களூர் தான் உள்ளது" இவ்வாறு அவர் ட்வீட் பதிவிட்டுள்ளார். கடந்த 2 நாட்களாகவே கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்தது. இதேபோல் நேற்று திடீரென பெங்களூரிலும் மழை கொட்டி தீர்த்தது.
பெங்களூரில் கொட்டிய கனமழை
பெங்களூரில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தநிலையில், நேற்று மாலை திடீரென கிளைமேட் மாறியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியபடி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை கொட்டியது. குறிப்பாக பெங்களூரில் வில்சன் கார்டன், சஞ்சய்நகர், ஹெப்பால், கெம்பேகவுடா விமான நிலையம், சாந்திநகர், விதான் சவுதா, சிவாஜிநகர், ராஜாஜிநகர், மெஜஸ்டிக், சாம்ராஜ்பேட்டை, மைசூர் ரோடு, ஓசூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஒருசில இடங்களில் மரக்கிளைகள் உடைந்து விழுந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும் திடீர் மழையால் பெங்களூர் வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.












Click it and Unblock the Notifications