இன்று பொங்கலுக்கு ஊருக்கு கிளம்புறீங்களா? மழை அலர்ட் இருக்கு.. இதை தெரிஞ்சிக்காம புறப்பட வேண்டாம்!
சென்னை: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காகப் பொதுமக்கள் ஏற்கனவே சொந்த ஊருக்குப் புறப்பட்டு வருகின்றனர். ஒருவேளை அப்படி நீங்கள் இன்று ஊருக்குக் கிளம்ப பிளான் செய்திருந்தால் மழை வருமா என்பது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பை நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இப்போது பருவமழை ஓரளவுக்குக் குறைந்து குளிர் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிரே நிலவி வருகிறது.

குறிப்பாகக் காலை நேரங்களில் பல பகுதிகளில் பனிமூட்டம் இருப்பதால் சாலைகளில் செல்வதே வாகன ஓட்டிகளுக்குச் சவாலாக உள்ளது. நேற்றைய தினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்து இருக்கிறது.
இன்று மழை இருக்கு:
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை ஜனவரி 13ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஜனவரி 14ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்:
வரும் ஜனவரி 15ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஜனவரி 16, 17 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (12-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோர பகுதிகளில் இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications