சென்னையை போல் பெங்களூரை புரட்டிப்போட்ட மழை.. ஐடி ஏரியாக்களை சூழ்ந்த மழைநீர்! 2 நாள் மஞ்சள் அலர்ட்
பெங்களூர்: சென்னையை போல் பெங்களூரில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள ஏரியாக்களில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.மேலும் பெங்களூரில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னைக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி உள்பட பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் நுழைந்துள்ளது.

மேலும் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த பகுதி சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையை நாளை நெருங்கும். இதனால் நாளை சென்னையில் கனமழை வெளுத்து வாங்க உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தான் சென்னையை போல் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் பல இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக பெங்களூரை எடுத்து கொண்டால் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று காலையில் பெய்த கனமழையால் பொதுமக்கள் அலுவலகம் செல்ல சிரமப்பட்டனர். மழையில் நனைந்தபடி பலரும் டூவீலர்களில் அலுவலகம் சென்றனர். அதேபோல் ஒயிட்பீல்ட் மற்றும் ஐடிபிஎல் பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு ஊழியர்கள் மெட்ரோ ரயில்களில் சென்றனர்.
இன்று காலை முதல் தொடர்ந்து பெங்களூரில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக பன்னரக்கட்டா ரோடு, ஹெப்பால் மேம்பாலம், அவுட்டர் சிங் ரோடு, கொரகுண்டேபாளையா, மாரத்தஹள்ளி, இப்லூர், விமான நிலைய சர்வீஸ் ரோடு, வசந்த் நகர், ஓல்டு மெட்ராஸ் ரோடு, ஹூடி ஜங்ஷன், எம் பாளையா, டெப்போ ரோடு, ஹென்னூர் - பாகலரூ் மெயின் ரோடு உள்பட பல இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
Hennur Railway Underpass.
— North BangalorePost (@nBangalorepost) October 15, 2024
VC : Deema Mathew @blrcitytraffic @BBMPCOMM #BengaluruRains #Bengaluru pic.twitter.com/Y4N22KGFga
இதற்கிடையே தான் பெங்களூரில் இன்று முதல் 4 நாட்கள் தொடர்ந்து மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு நாளையும், நாளை மறுநாளும் பெங்களூரில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மஞ்சள் அலர்ட் என்பது 24 மணிநேரத்தில் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.6 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகும். அதோடு வானிலை நிலவரம் மோசமாக வாய்ப்பு இருக்கும்.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: இன்று காலை 8.30 மணி நிலவரப்படி பெங்களூரில் 16.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் 10.5 மில்லி மீட்டர் மழையும், எச்ஏஎல் விமான நிலையத்தில் 8.6 மில்லமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
பெங்களூர், பெங்களூர் புறநகர், ராமநகர், கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் இன்று தொடர்ந்து மிதமான மழை என்பது பெய்ய உள்ளது. பெங்களூரை பொறுத்தவரை நாளை (அக்டோபர் 16) மற்றும் அக்டோபர் 17 ஆகிய நாட்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் பெங்களூரில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications