வெந்து தணியுது தமிழ்நாடு.. இன்று முதல் 6ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. பின்னாடியே விரட்டுதே வெயில்
சென்னை: தமிழகத்தில் வெயில் கொளுத்தி வரும்நிலையில், இன்று முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.. அதுவும், கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது.. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியையும், சில நேரங்களில் 105 டிகிரி கடந்தும் வெயில் பதிவாகி வருகிறது.

சேலம்: இதில் ஈரோடு, சேலத்தில் 108 டிகிரியையும் கடந்து இந்த வருடத்தில் இதுவரை இல்லாத வெப்ப அளவாக பதிவாகி வருகிறது.. ஈரோட்டில் 110 டிகிரி வெயில் கொளுத்தி திகிலை கிளப்பிவிட்டு வருகின்றன.. இங்கேயே இப்படியென்றால், கோடை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல், வால்பாறையில்கூட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
ஊட்டியில் இதுவரை இல்லாத வெப்ப அளவு பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து, நீலகிரி மக்களுக்கே கலக்கத்தை தந்துவிட்டது. நேற்றுகூட, தமிழகத்தில் 18 இடங்களில் நேற்று வெயில் சதமடித்திருக்கிறது..
ஈரோடு: தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 112 டிகிரி, ஈரோட்டில் 111 டிகிரி, வேலூரில் 110 டிகிரி, திருச்சியில் 109 டிகிரி பதிவாகி உள்ளது.
அதுபோலவே, தருமபுரி, திருத்தணி, திருப்பத்தூர், சேலத்தில் 108 டிகிரி, மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 107 டிகிரி, பாளையங்கோட்டையில் 105 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், தஞ்சாவூரில் தலா 104 டிகிரி, கோவையில் 103 டிகிரி, நாகப்பட்டினத்தில் 102 டிகிரி, கரூர் பரமத்தியில் 112 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
வெப்பநிலை: இன்றுகூம்கூட, வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும் என்றும், அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் மீண்டும் தெரிவித்துள்ளது.. அதேசமயம், தமிழகத்துக்கு மழை வாய்ப்பு வரப்போகிறது என்ற ஆறுதல் தகவலையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: "வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று பெரும்பாலான இடங்களிலும், வரும் 4, 5, 6-ம் தேதிகளில் சில இடங்களிலும் வெப்ப அலை வீசக்கூடும். வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் (மே 3, 4) சில இடங்களில் 111 டிகிரி, இதர மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 106 டிகிரி, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை இருக்கக்கூடும்.
தமிழகம்: தமிழகப் பகுதிகளின் மேல்வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரை) கூடிய, லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 7, 8-ம் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications