7ஆம் தேதி மழை வெளுத்துக்கட்டப் போகுது.. அதுக்கு முன்னாடியே.. “குளு குளு” செய்தி சொன்ன வானிலை மையம்!
சென்னை: மே 7ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில், முன்பை விட வெயிலின் தாக்கம் கொடூரமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே சென்றால் முகம், உடல் எரியும் அளவுக்கு வெப்பம் தகித்து வருகிறது. மழை பெய்தால் தான் வெப்பம் கொஞ்சம் கட்டுக்குள் வரும் என்ற நிலை இருக்கிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதி மக்களுமே மழைக்காக காத்திருந்து வருகின்றனர். இந்நிலையில், மே 9ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு: இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மே 7 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், இன்று முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்று (மே 3) முதல் மே 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யக்கூடும்: வரும் மே 7ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 8ஆம் தேதி மற்றும் மே 9ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: 03.05.2024 & 04.05.2024: வட தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 05.05.2024 & 06.05.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வானிலை: தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°-44° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°-40° செல்சியஸ். கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்: இன்று முதல் மே 7ஆம் தேதி வரை, காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications