சென்னைக்கு இன்னும் 2 நாள் மழை இருக்கு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஜில் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் மாத தொடக்கத்தில் நல்ல மழை பெய்தது. அதன்பின் நாட்கள் செல்ல செல்ல மழையும் மெல்ல மெல்ல குறைந்தது. நேற்று மற்றும் நேற்று முன் தினம் இரவு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்தது. எனினும் நேற்று மதியத்திற்கு பிறகு பெரிய அளவில் தமிழகத்தில் மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 30 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"நேற்று தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (25-12- 2024) காலை 08.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.
இதனால் இன்று தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28-12-2024 மற்றும் 29-12-2024: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30-12-2024 மற்றும் 31-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 25-12-2024: வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 26-12-2024 முதல் 29-12-2024 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்: 25-12-2024: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 26-12-2024 முதல் 29-12-2024 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications