நெல்லை, தென்காசி, குமரி உள்பட 14 மாவட்டங்கள்.. இன்று இரவு 7 மணி வரை கொட்டப்போகும் மழை! வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, நீலகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதே போல் தமிழகத்திலும் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும், ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை திருவள்ளூர், தென்காசி, நெல்லை, குமரி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- நேற்று (20.07.2024) காலை 8.30 மணியளவில் ஒரிசா கடற்கரையை ஒட்டிய சில்கா ஏரி அருகில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவிழந்து, இன்று (21.07.2024) காலை 8.30 மணியளவில் ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய சத்திஸ்கர் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஜூலை 21 மற்றும் நாளை ஜூலை 22ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 23 முதல் 27 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 - 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 - 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications