அடுத்த 2 மணி நேரம்.. சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது. இதேபோல் தலைநகர் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையமும், தமிழகத்தில் 20 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறது.
இந்த நிலையில் இன்று மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி உள்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, குமரி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 மணி நேரத்தில் பல்லாவரம், ஆலந்தூர், ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு, வாலாஜாபாத், குன்றத்தூர், மதுரவாயல், பள்ளிப்பட்டு, தாம்பரம், திருவள்ளூர் திருத்தனி, உத்திரமேரூர், வாலஜாபேட்டை, அம்பத்தூர் ஆகிய இடங்களிலும் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று மதியம் சென்னை வானிலை மையம், ஒரு வாரத்திற்கான முன்னறிவிப்பை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17 முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications