அடுத்த 2 மணி நேரம்.. சென்னை டூ நாகை வரை.. 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. சேலம், சென்னை, கடலூர், கோவை, தர்மபுரி, குமரி திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இன்றும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது, இன்று மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் இன்று மாலை 4 மணி வரை மதுராந்தகம், செய்யூரில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதேபோல நாளை முதல் வரும் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications