அடுத்த 2 மணி நேரம்.. குடை அவசியம்.. நெல்லை, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: கனமழை காரணமாக தென் தமிழகத்தில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தென்காசி மாவட்டத்தின் கடனா அணை பகுதியில் 26 செமீ மழை பெய்தது.

நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 23 செமீ மழையும், நாலுமுக்கு பகுதியில் 22 செமீ மழையும்,
தூத்துக்குடி விமான நிலையம் ARG பகுதியில் 21 செமீ மழையும், மாஞ்சோலையில் 18 செமீ மழையும் பெய்துள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழை இன்றும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. குற்றாலம் அருவியில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடனாநதி, ராமநதி அணைகளில் முழு கொள்ளவை எட்டியுள்ளன. இதனால் இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கனமழையால் விளை நிலங்கள் தண்ணீர் மூழ்கின. நெற்பயிர்கள், வாழை, சேனை போன்றவை நீர் மூழ்கின. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வானிலை அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. லேசான இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட ஒரு வாரத்திற்கான அப்டேட்டில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை 15 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 17 ஆம் தேதி தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது,
வரும் 18 ஆம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 20 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications