குடை ரெடியா? இடி, மின்னல் + பலத்த காற்றுடன்.. தமிழகத்தில் இன்று கொட்டப் போகும் மழை.. வானிலை அப்டேட்
சென்னை: தமிழகத்தில் நேற்று நெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், இன்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்பநிலையும் 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் அடுத்த மாதம் 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மார்ச் மாதம் முதல் தொடங்கிய கோடைக்காலத்தினால் வெப்பம் தகித்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் கடுமையாக வீசுகிறது. இதனால் மக்கள் வெளியில் செல்லவே அச்சமடைந்து வருகிறார்கள். குறிப்பாக வேலூர், சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில் வெப்பம் தகித்து வருகிறது.

நெல்லை, தூத்துக்குடியில் கனமழை
தொடர்ந்து வெயில் கொளுத்தி எடுப்பதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இந்த அளவுக்கு வெயில் இல்லை. அவ்வப்போது மழை பெய்து வருவதால் பெரிதாக வெயில் தெரியவில்லை. ஒருசில நாட்களில் பகல் நேரங்களில் வெயிலும் மதியத்திற்கு பிறகு மழையும் பெய்து வந்தது.
நேற்று முன் தினம் தமிழகத்தில் தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களில் காலையிலேயே கனமழை வெளுத்து வாங்கியது. நேற்றும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மதியம் 3 மணியளவில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் அடுத்த மாதம் 2 ஆம் தேதி வரைக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
* தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 26 ஆம் தேதி ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* நாளை 27 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 28-04-2025 முதல் 02-05-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?
* சென்னையை பொறுத்தவரை இன்று (26-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
* நாளை (27-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை நிலவரம் செமீ
* தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அதிகபட்சமாக 3 செமீ மழை பெய்துள்ளது. இதேபோன்று குமரியின் திற்பரப்பு மற்றும் தேனியின் உத்தமபாளையத்தில் தலா 3 செமீ மழை பெய்துள்ளது.
* கன்னியாகுமரியின் பேச்சிப்பாறை ஏடபிள்யூ எஸ் மற்றும் தூத்துக்குடி மணியாச்சி தலா 2 செமீ மழை பெய்துள்ளது.
* திருச்சுழி (விருதுநகர்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), கயத்தார் (தூத்துக்குடி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சிவகாசி (விருதுநகர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), மேட்டுப்பட்டி (மதுரை), களியல் (கன்னியாகுமரி), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), பெரியபட்டி (மதுரை) தலா 1 செமீ மழை பெய்துள்ளது.
வெப்பநிலை நிலவரம்:
* அதிகபட்ச வெப்பநிலை:- கரூர் பரமத்தி மற்றும் மதுரை விமான நிலையம் : 40.2° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி: 22.0° செல்சியஸ்
* கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
* தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-41° செல்சியஸ், வட தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-37° செல்சியஸ், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 33-35° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 19-29° செல்சியஸ் பதிவாகி-யுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: 26-04-2025 முதல் 30-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 26-04-2025 மற்றும் 27-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 28-04-2025 முதல் 30-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
26-04-2025 மற்றும் 27-04-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 26-04-2025: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 27-04-2025 முதல் 30-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்: 26-04-2025: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள பகுதிகள், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 27-04-2025 முதல் 30-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்: 26-04-2025 முதல் 30-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications