குடை அவசியம் மக்களே.. தென்காசி, கன்னியாகுமரியில் இன்று மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் நேற்று இரவு கன்னியாகுமரி, கோவை, புதுக்கோட்டையில் நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் இன்று தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல் நேற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் சுமார் ஒரு மணி நேரம் மழை நல்ல மழை பெய்தது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று சாரல் மழை பெய்தது. இரவில் புதுக்கோட்டை நகர் உள்பட கரம்பக்குடி, கொத்தமங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்த நிலையில், நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது. அதுவும் மாலை நேரத்தில் நல்ல மழை பெய்தது. சிங்காநல்லூர், கவுண்டம்பாளையும், போத்தனூர், நரசிம்மன்நாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகள் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் சாலையின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவானி அணையின் நீர்மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது. மொத்தம் உள்ள 50 அடி நீர்மட்டத்தில் 28 அடியை தாண்டியது. இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் நேற்று நல்ல மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் நல்ல மழை பெய்தது.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக இரவு நேரத்தில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில், இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுவையில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications