சென்னை விமான நிலையத்தில்.. வானிலை நிலவரத்தை பொறுத்து சேவை! வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் வடதமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு தொடங்கி புதுக்கோட்டை வரை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வானிலை நிலவரத்தை பொறுத்துதான் விமான சேவை இருக்கும் என சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வங்கக்கடலில் உருவாகும் புயல் சென்னை அல்லது வட தமிழக கடலோர மாவட்டங்களை கடுமையாக பாதித்து விடுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் புயலுக்கு முன்னோட்டமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியிருந்தது. இது அந்தமான் நிகோபர் பகுதியிலிருந்து மெல்ல நகர்ந்து வட தமிழக பகுதியை நோக்கி வந்தது. மறுபுறம் மேலடுக்கு சுழற்சியானது, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உரு பெற்றது.

இது தற்போது சென்னைக்கு தெற்கே சுமார் 300 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. வரும் 30 தேதி வாக்கில் இது மாமல்லபுரம் மற்றும் கடலூருக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட நாட்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், காற்றும் அதிக வேகத்துடன் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக இன்று தொடங்கி நாளை மாலை வரை வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை மாலை முதல் 30ம் தேதி மதியம் வரை வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான பெய்யக்கூடும். வெப்பநிலை 28" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கனமழை மிக கனமழை பெய்யக்கூடும். வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இப்படி இருக்கையில் இது விமான சேவையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. எனவே, புயல் எச்சரிக்கை காரணமாக வானிலை நிலவரத்தைப் பொறுத்து விமானங்கள் இயக்கப்படும் என சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் விமான சேவைகள் குறித்து பயணிகள் கேட்டறிந்து பயணத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பலத்த காற்று வீசும்பட்சத்தில் சிறிய ரக விமானங்களை இயக்கலாமா என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications