ப்ரெட், தக்காளி, வெங்காயம் காலி! எலுமிச்சை கூட 1 கிலோ தான்! மார்கெட்டுகளை துடைத்தெடுத்த சென்னையன்ஸ்
சென்னை: சென்னையில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க மார்க்கெட்டுகள், சூப்பர் மார்கெட்டுகளில் முண்டியடித்ததால் கூட்டம் அலைமோதியது. சில கடைகளில் சில மணி நேரங்களிலேயே அனைத்து பொருட்களும் விற்றுத் தீர்ந்தன.
15ஆம் தேதியான நாளை முதல் 17ஆம் தேதி வரை சென்னை மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை கனமழையும் நாளை மறுநாள் அதிக கனமழையும் பெய்யும் என எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் 14.10.2024 முதல் 17.10.2024 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் , 14.10.2024 முதல் 17.10.2024 வரை மொத்தம் சுமார் 40 செ.மீ. வரையும், ஒரே நாளில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக தமிழக அரசு முன்னெச்சரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் கனமழையை எதிர் கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கனமழையை எதிர்கொள்ளவும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மேலும், கனமழை தாக்கத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளார். அதன்படி, ” ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்” உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனமழை மற்றும் மின்சாரம் நிறுத்தம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பால், பிரட், காய்கறிகள், மெழுகுவர்த்தி உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டுகளிலும் காய்கறி சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தேவையை விட அதிக அளவு பிரட், காய்கறிகள் உள்ளிட்டவற்றை மக்கள் வாங்கி செல்கின்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் வியாபாரிகள் சற்றே திணறிப் போயினர்.
மேலும் ஏற்கனவே மழை காரணமாக காய்கறி விலை அதிகரித்து நிலையில், பேனிக் பையிங் காரணமாக காய்கறி விலை 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகமாக விற்கப்பட்டது. இருந்த போதும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு காய்கறிகளை வாங்கிச் சென்றனர். சிலர் எலுமிச்சை. இஞ்சி உள்ளிட்டவற்றை கூட கிலோ கணக்கில் வாங்கிச் சென்றனர். சில கடைகளில் பிரட், பால், வெங்காயம் தக்காளி ,உள்ளிட்டவை விற்று தீர்ந்தது. மேலும் மின்சார தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற பயத்தின் காரணமாக மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, டார்ச் லைட், பேட்டரி உள்ளிட்டவற்றை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டினர். சில கடைகளில் மெழுகுவர்த்தி முற்றிலும் தீர்ந்து போனதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications