வடகிழக்கு பருவமழையில் சென்னைதான் டாப்! வேறு எந்த மாவட்டத்திலும் இவ்வளவு மழை இல்லீங்க
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இப்படி இருக்கையில் சென்னையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் போது, சென்னை உட்பட வட மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், மழை தீவிரமடையாமல் இயல்பான அளவிலேயே பெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். காரணம், சமீப ஆண்டுகளாக கால நிலை மாற்றத்தால், ஓராண்டுக்கான மழை ஒரே நாளில் பெய்துவிடுகிறது. இது சென்னையில் பெரும் வெள்ளத்தை உருவாக்கி மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை முடக்கிவிடுகிறது. சில சமயங்களில் தவிர்க்க முடியாமல் உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டுவிடுகிறது. எனவேதான் வடகிழக்கு பருமழை இயல்பான அளவிலேயே பெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள்.

ஆனால் இந்த ஆண்டு மழை இயல்பை விட 4 சதவிகிதம் அதிகமாக பெய்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் அதிக மழை பெய்திருக்கிறது. அக்.1ம் தேதி பருவமழை தொடங்கியது. அன்று தொடங்கி இன்ற தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 303.8 மி.மீ மழை பொழிந்திருக்கிறது. இயல்பாக 292.8 மி.மீ மழை தான் பெய்ய வேண்டும். ஆகவே இது இயல்பை விட 4% அதிகம். அதேபோல சென்னையில் தற்போது வரை 550.7 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த நாட்களில் இயல்பாக 534.7 மி.மீ தான் மழை பெய்திருக்க வேண்டும். அந்த வகையில் இது 3% அதிகம்.
550 மி.மீ அளவுக்கு தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் மழை பதிவாகவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 431.9 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது அம்மாவட்டத்தின் இயல்பான மழையின் அளவை விட 67% அதிகமாகும். அதாவது இந்த காலத்தில் 259.3 மி.மீ அளவுக்குதான் மழை பெய்திருக்க வேண்டும்.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications