சென்னை டூ கடலூர்.. தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும்... வானிலை மையம்
சென்னை: இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென் மேற்கு வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வெறும் 3 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. நேற்று, மாலை 5.30 மணி நிலவரப்படி, இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கில் 100 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 420 கி.மீ. தூரத்திலும், சென்னை தென் கிழக்கே 500 கி.மீ. தூரத்திலும் நிலைக் கொண்டு இருக்கிறது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கரையோரமாக நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் (அதாவது இன்று அதிகாலை 5.30 மணிக்குள்) புயலாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந் தேதி (நாளை மறுதினம்) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள்-புதுச்சேரி இடையே கரையை அடையும்.
இதனால் இன்று (வியாழக்கிழமை) முதல் டிசம்பர் 2-ந் தேதி வரை மழை தொடரும் . தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இதேபோல் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை சென்னையில் கனமழை: நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் . குறிப்பாக நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
சனிக்கிழமை அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். டிசம்பர் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
2-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
புயல் காற்று: புயல் சின்னம் காரணமாக, தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசும். நாளையும், நாளை மறுதினமும் வட தமிழக கடலோரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்திலும் வீசக்கூடும் .
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் .
மழை அளவு: நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் 19 செ.மீ., கோடியக்கரை, வேளாங்கண்ணி தலா 18 செ.மீ., திருப்பூண்டி 14 செ.மீ., மணலி, திருக்குவளை தலா 13 செ.மீ., திருவாரூர், வேதாரண்யம் தலா 12 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பதிவானது.












Click it and Unblock the Notifications