ACல இருந்து DC வரை இருக்கோம்.. எங்க பிரச்சினையை யாரும் தீர்க்கலை.. எர்த் இருக்கு! குமுறும் காவலர்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காவல் நிலைய குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் வந்துவிட்டதால் உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வரும் காட்சிகளை காவலர் ஒருவர் விவரிப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.
சென்னையில் 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளத்தை சென்னைவாசிகள் மட்டுமில்லை, அவர்களுடைய உறவினர்கள் கூட மறக்கவே முடியாது. சென்னையே மூழ்கியது என்று சொல்லும் அளவுக்கு ஆங்காங்கே தண்ணீர்!

ஒரு பால் பாக்கெட்டு ரூ 100க்கு விற்பனை செய்த கொடுமைகளும் நடந்தன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்தாலே மக்களுக்கு 2015 கண் முன் வந்து செல்லும். ஆனால் ஆட்சியாளர்களும் வானிலை மையத்தினரும் அது போன்றதொரு வெள்ளம் ஏற்படாது என கூறி வந்தனர்.
இந்த முறை சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் 100 முதல் 200 மி.மீ. மழைபெய்யும் என சொல்லப்பட்டது. இது மக்களுக்கு பெரும் பயத்தை காட்டியது. மக்கள் பயந்ததற்கு ஏற்ப நேற்று காலை முதல் கனமழை இல்லை இல்லை பேய்க்கு பேய் மழை கொட்டித் தீர்த்தது.
கூடவே காற்றும் வேறு! சென்னையில் பல இடங்களில் மரங்கள் விழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பி ஊருக்குள் வழிந்தோடுகின்றன. வேளச்சேரி, மேடவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் சென்னையின் மைய பகுதியான கீழ்ப்பாக்கம் பகுதியிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. படகு விடும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அங்குள்ள காவலர் குடியிருப்பில் நிறைய பேர் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்க யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து காவலர் ஒருவர் கூறுகையில் இந்த பகுதியில் துணை ஆணையர், இணை ஆணையர், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர், கான்ஸ்டபிள் என நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் குடும்பத்தினர் விட்டுவிட்டு மக்கள் பணிக்காக சென்றுவிட்டார்கள். என் வீட்டில் என் மனைவி மக்கள் பணிக்காக சென்றுவிட்டார். என் குழந்தைகளை பார்க்க ஆள் இல்லை. அதனால் என் வீட்டில் இருக்கிறேன். மழை நின்று 12 மணி நேரமாகியும் இந்த இடம் இப்படித்தான் இருக்கிறது. தண்ணீர் குறைந்தபாடில்லை.
சாப்பாடு இல்லை, பால் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை. பாத்ரூம் செல்லவும் தண்ணீர் கிடையாது. எங்க குடும்பம் நல்லாயிருந்தாதானே பொதுப் பணி செய்ய நாங்க நிம்மதியா போவோம். சாப்பாட்டுக்கே பிரச்சினையா இருக்கு.கீழ் தளத்தில் தண்ணீர் வந்துவிட்டதால் மேல் தளத்திற்கு செல்கிறார்கள். அங்கு கடுங்குளில் அவதிப்படுகிறார்கள். மக்கள் பணி செய்யும் எங்களுக்கு இந்த நிலை இருந்தால் நாங்கள் எப்படி மீட்பு பணிகளுக்கு செல்ல முடியும் என தனது மனக்குமுறலை வைக்கிறார் இந்த காவலர்.












Click it and Unblock the Notifications