சூடுபிடிக்காத வடகிழக்கு பருவமழை! சென்னையில் கடுங்குளிர் நிலவுவது ஏன்? வானிலை மையம் விளக்கம்
சென்னை: சென்னையில் அந்த அளவுக்கு மழை இல்லாவிட்டாலும் மாலை வேளைகளில் கடும் குளிர் நிலவுவது குறித்து இந்திய வானிலை மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் விளக்கியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பெரிதாக எந்த ஒரு மழையும் இல்லை. அவ்வப்போது காற்றின் திசை மாறுபாடு காரணமாக லேசான மழை பெய்து வருகிறது. ஆனாலும் மாலை நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது.

இதுகுறித்து பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில் அக்டோபர் மாதம் இன்றுடன் முடிவடையும் நிலையில் வடகிழக்கு பருவழை இயல்பை விட 43 சதவீதம் குறைவாக உள்ளது.
123 ஆண்டுகளில் அக்டோபரில் 9ஆவது முறையாக வடகிழக்கு பருவமழை இயல்வை விட குறைவாக உள்ளது. தமிழகம்,புதுவையில் அக்டோபர் மாதம் 98 மி.மீ. மழை பெய்துள்ளது. வழக்கமான மழை 171 மி.மீ. ஆகும். அது போல் கன்னியாகுமரியில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது.
6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் 17 மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவாகவும் மழை பெய்துள்ளது. தமிழகத்தையொட்டி உள்ள கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுவையில் மழை பெய்யும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியபோது அரபிக் கடலில் ஒரு புயலும் வங்கக் கடலில் ஒரு புயலும் உருவாகி நகர்ந்து சென்றுவிட்டது. இதனால் காற்றின் திசையில் மாறுபாடு உள்ளது. காற்றில் ஈரப்பதம் இருக்கிறது. ஆனால் காற்று வழக்கம் போல் வீசி வருகிறது. காற்றின் வேகத்தில் மாறுபாடு ஏற்பட்டால் நல்ல மழை பெய்யும்.
இல்லாவிட்டால் இப்படித்தான் விட்டு விட்டு பெய்யும். காற்று வேகமாக வீச ஏதேனும் நிகழ்வுகள் (காற்றழுத்தம், வளிமண்டல சுழற்சிகள்) தேவை. அவை இருந்தால் மழை தீவிரமடையும். இவ்வாறு பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவரிடம் மழை இல்லாவிட்டாலும் சென்னையில் மாலை நேரங்களில் நிலவும் குளிர் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பாலசந்திரன் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களில் தொடங்கிய போது அரபிக் கடலில் ஒரு புயலும் வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தமும் உருவாகி சென்றது. இதனால் காற்றில் ஈரப்பதம் நிலவி வருகிறது. இது திரவமாகும் அளவுக்கு வானிலையில் எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. இதனால் இந்த குளிர் நிலவத்தான் செய்யும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications