ஆலந்தூரில் 24 மணி நேரத்தில் அதிபட்சமாக 119 மில்லி மீட்டர் மழை.. சென்னை எந்த பகுதியில் எவ்வளவு மழை
சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 37 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆலந்தூரில் 119 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக புழல் பகுதியில் 111 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் நேற்று பலத்த மழை பெய்தது. தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம். திருவள்ளூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. ஆலந்தூர், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், வேளச்சேரி,பள்ளிக்கரணை உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளில் நேற்று மிக கனமழை பெய்தது.

அதிகப்படியான கனமழை காரணமாக கிண்டி, ஆலந்தூர் பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல்பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பல்வேறு பகுதிகளில் தண்ணீரும் தேங்கியது. தண்ணீர் தேங்க வழியில்லாத பகுதியிலும் தண்ணீர் தேங்கி நின்றது.சென்னை எழும்பூர் லங்ஸ் கார்டன் சாலை, ராயப்பேட்டை ஜிபி சாலை பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இதேபோல் சென்னை கோயம்பேடு மெட்ரோ பாலத்தின் கீழ் முழங்கால் அளவு நீர் தேங்கியது. கோயம்பேடு மார்க்கெட் செல்லக்கூடிய பிரதான சாலையில் மழைநீர் தேங்கியதால் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். கோயம்பேடு மெட்ரோ பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மட்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே நேற்று காலை 8.40 மணி வரையிலான நிலவரப்படி சென்னையில் பெய்த மழையின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஆலந்தூரில் 119 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக புழல் பகுதியில் 111 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மீனம்பாக்கத்தில் 89.7 மில்லி மீட்டரும், ஆலந்தூரை சுற்றி மற்ற பகுதிகளில் 86.6 மில்லி மீட்டரும், அடையாறில் 72.6 மில்லி மீட்டரும், கொளத்தூரில் 70.2 மில்லி மீட்டரும், பெருங்குடியில் 70.2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மாதவரத்தில் 59.6 மில்லி மீட்டரும், மணலியில் 49.2 மில்லி மீட்டரும், அண்ணா நகரில் 46.8 மில்லி மீட்டரும், திருவிக நகரில் 44.7 மில்லி மீட்டரும், தண்டையார்பேட்டையில் 44.1 மில்லி மீட்டரும், அம்பத்தூரில் 43.6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
இலங்கை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இன்றும் சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications