சட்டென மாறிய வானிலை.. அதிகாலையில் சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை! மயிலாப்பூர் 80 மி.மீ மழை
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பெய்த கனமழை நகரின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. அதிகாலை 2 மணி முதல் தொடங்கிய மழை காலை 5 மணி வரை விடிய, விடிய கொட்டியது. இதனால், தாழ்வான பகுதிகள் முழுவதும் நீர் தேங்கி, வேலைக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் அதிகாலை முதலே கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் தாமதம் அடைந்ததால் விமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
சென்னையின் மயிலாப்பூரில் மட்டும் 80 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் அயனாவரம் 70 மி.மீ, மேற்கு மாம்பலம், பெரம்பூர், தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் தலா 60 மி.மீ மழை பதிவானது.
இதேபோல், சென்ட்ரல், எழும்பூர், கோடம்பாக்கம், கோயம்பேடு, ஆயிரம் விளக்கு, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கத்தாரின் தோகாவில் இருந்து 317 பயணிகளுடன் சென்னை வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக பெங்களூரு திருப்பிவிடப்பட்டது. மேலும், துபை, லண்டன், ஷார்ஜா ஆகிய இடங்களில் இருந்து வந்த விமானங்கள் சென்னையின் வானில் பல நிமிடங்கள் வட்டமடித்த பிறகே தரையிறங்கின. சென்னையிலிருந்து புறப்படவிருந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
சென்னையில் ஏற்பட்ட இந்த திடீர் கனமழைக்கு முக்கிய காரணமாக, தென்னிந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள கீழடுக்கு சுழற்சியுமே காரணம் என கூறப்படுகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, இன்று (செப்டம்பர் 16) முதல் வரும் 21-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் கனமழையும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை நேர மழையால் தாழ்வான பகுதிகளில் முழுவதும் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் செல்ல இயலாமல் போனது. பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் நீர் தேங்கியதால், அலுவலகத்திற்கு செல்லும் பயணிகள் அவதிக்கு ஆளானர். மழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications