"மழை இன்னும் முடியல.. மேலும் தீவிரமடையும்!" சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை.. வெதர்மேன் வார்னிங்
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களை உள்ளடக்கிய KTCC பகுதியில் இரவு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று காலை மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். காலை 8.30 மணிக்குள் சென்னையின் பல பகுதிகளில் 100 மி.மீ. மழையை தாண்டக்கூடும் என்றும் சில இடங்களில் 150 மி.மீ. வரை கூட மழை பெய்யும் அவர் கணித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. சென்னை உட்பட வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை சமயத்திலேயே அதிக மழையை பெறும். அதன்படி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.

கொட்டும் கனமழை
நேற்றைய தினம் இரவு ஆரம்பித்த மழை விடிய விடிய கொட்டியது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவே விடிய விடிய சென்னையில் மழை பெய்துள்ளது. சென்னையின் நகர் பகுதிகள், புறநகர் பகுதிகள், அண்டை மாவட்டங்கள் என பல்வேறு இடங்களிலும் இரவு முழுக்க மழை பெய்துள்ளது. இதற்கிடையே மழை இன்று நாள் முழுக்க தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்
இதற்கிடையே இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டிலேயே முதலிடத்தை பிடிக்கும் வகையில் சென்னையில் மழை பெய்துள்ளது. ஏற்கெனவே பல பகுதிகளில் 100 மிமீக்கும் அதிகமாக மழை பெய்துள்ள நிலையில், மேலும் மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. காலை 8.30 மணிக்கு மழைப்பொழிவு கணக்கிடப்படும் நிலையில், அதற்கு முன்பாக சென்னையின் இன்னும் பல பகுதிகளில் 100 மி.மீ. மழை அளவை கடக்க வாய்ப்புள்ளது. சில இடங்களில் மழைப் பதிவு 100 முதல் 150 மி.மீ. வரை செல்லக்கூடும்" என்றும் தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் மழை
அவர் இன்னொரு போஸ்ட்டில், "சென்னைக்குள் தீவிரமான மழையைத் தரக்கூடிய மேகங்கள் தற்போது நகர்ந்து வருகிறது. இந்த மழை மேகங்கள் நகருக்குள் நுழையும்போது சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழையின் வேகம் அதிகரிக்கும். விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்பும் நேரத்தில் மழை தீவிரமடைவதுள்ளது. இதனால், வெளியூர்களில் இருந்து சென்னைக்குத் திரும்பும் பயணிகள் மழை நிலவரத்தைக் கவனித்துப் பயணத்தைத் திட்டமிடுவது அவசியமாகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிகாலை வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கடந்த சில நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டிருந்தார். அதன்படியே நகர் முழுக்க மழை கொட்டி வருகிறது.
கவனம்
தமிழகத்தின் பல பகுதிகளில் அக்டோபர் 20 முதல் 22ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே கடந்த வார இறுதியில் சென்னையில் பெய்த கனமழையால் வடசென்னையின் பல பகுதிகளில் கடுமையான மழைநீர் தேக்கம் ஏற்பட்டது. பாரிமுனை, கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிக மழை பதிவானது.
தற்போது மீண்டும் சென்னையில் மழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, காலை நேரத்தில் அலுவலகம் மற்றும் பிற பணிகளுக்காக வெளியே செல்வோர், மழை நிலவரத்தையும் போக்குவரத்து நெரிசலையும் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப பயணத்தை திட்டமிட வேண்டும்.


Click it and Unblock the Notifications
