சென்னையில் பிள்ளையார் சுழி போட்ட மழை! இன்று முதல் தினமும் கனமழை இருக்கு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் இன்று முதல் சென்னையில் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னார் வளைகுடா பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இது தவிர விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பிற தென் மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நாளை அரபிக்கடலை நோக்கி நகரும் என்பதால் திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்கள் முதல் கடலோர பகுதிகள் வரை மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. உட்புற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று முதல் நாள்தோறும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மன்னார் வளைகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்போது.. அது கிழக்கு காற்று மற்றும் மழையை தாங்கும் மேகங்களை உள் பகுதிகளுக்கு நன்றாக இழுக்கும். சென்னை, வேலூர், ராணிப்பேட்டை மட்டுமின்றி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். பகல் நேரத்திலும் கூட.. சென்னையில் திடீர் குறுகிய கால தீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல குன்னூர் மற்றும் மாஞ்சோலை பகுதியிலும் நல்ல மழைக்குவாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications
