இன்னைக்கு சென்னையில் வெயில் ஓகேவாகத்தான் இருக்கும்! ஆனால் இதை மறந்துடாதீங்க
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலும் மழையும் மாறி, மாறி குழப்பியடித்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமையான இன்று சென்னையில் வெயில் எப்படி இருக்கும் என்பது பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதன்படி இன்று சென்னையில் அதிகபட்சமாக 98 டிகிரி ஃபாரான்ஹீட்தான் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில்,

"கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வெப்ப நிலையை பொறுத்த அளவில் அதிகபட்சமாக ஈரோட்டில் 38.6° செல்சியஸும், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 16.5° செல்சியஸும் வெயில் பதிவாகியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-5° செல்சியஸ் உயர்ந்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33-39° செல்சியஸ், தென்தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-36° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 21-29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களை பொறுத்த அளவில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17-04-2025 முதல் 21-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 17-04-2025 முதல் 19-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 17-04-2025 முதல் 19-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை:
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் 15-04-2025 முதல் 19-04-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் இன்று வெயில் ஓகேவாக இருந்தாலும், சென்னையில் வெட் பல்ப் வானிலை நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் வெயில் குறைவாக இருந்தாலும் உடலிலிருந்து வியர்வை வெளியேறாது. எனவே உடலின் வெப்பமும் குறையாது. எனவே சென்னை மக்கள் அதிக அளவு நீரை பருக வேண்டும். முடிந்த வரை நிழலான இடத்தில் இருப்பது சிறந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications