சின்னசேலத்தில் பனி விழும் மலர் வனம்.. கள்ளக்குறிச்சியை மூடிய வெண்படலம்! காலை 7.30 மணியானாலும் விலகல
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை நேரத்தில் அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. காலை 7.30 மணி கடந்தும் பனி விலகாததால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நீலகிரி முதல் டெல்டா மாவட்டங்கள் வரை பனிமூட்டம் அதிகரித்துள்ள நிலையில், இதனால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக காலை 7.30 மணி வரையிலும் பனி விலகாமல் நீடிப்பதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.

ஜில்லென ஊட்டி
நீலகிரி மாவட்டத்திலும் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பனி அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஊட்டியிலிருந்து தேனாடுகம்பை, எப்பநாடு செல்லும் சாலைகளிலும், கோத்தகிரி மலைப்பாதைகளிலும் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக தெரியாத நிலை ஏற்படுகிறது.
அதனால்தான், வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து, முகப்பு விளக்குகளை பயன்படுத்தி பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கனமழை மற்றும் பனிமூட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
டெல்டாவிலும் கடும் பனி!
தஞ்சாவூர், திருவாரூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை 7.30 மணி கடந்தும் பனி விலகாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.
குறிப்பாக தஞ்சாவூர் புறநகர் பகுதிகளான கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அருகில் உள்ள விளைநிலங்கள்கூட தெரியாத அளவுக்கு சாலைகள் முழுவதும் பனியால் சூழப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சியில் என்ன நிலை?
இன்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான சங்கராபுரம், சின்னசேலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலைகள் முழுவதும் பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளித்தன.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக பயணம் செய்தனர்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வரும் சூழலில், அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து வருவது விவசாயிகளிடையேயும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விளைநிலங்கள் பனியால் சூழப்படுவதால் விவசாயப் பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
