அரபிக் கடலின் மேல் புஸு புஸுனு "பொமரேனியன் நாய்" படுத்து கிடக்குது! பரவும் இமேஜ்!
சென்னை: அரபிக் கடலில் பொமரேனியன் நாய் ஒன்று படுத்துக் கிடப்பது போல் மேகக் கூட்டங்கள் காணப்படுவதாக நெட்டிசன்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வருகிறார்கள்.
தென் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்டவைகளுக்கு பலனை அளிக்கக் கூடிய தென் மேற்கு பருவமழை கடந்த 19-ஆம் தேதி தெற்கு அந்தமானில் தொடங்கியது. இது வரும் ஆகஸ்ட் வரை நிலவும்.

இந்த தென் மேற்கு பருவமழை விலகியவுடன்தான் தமிழகத்திற்கு பலனை அளிக்கக் கூடிய வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்த நிலையில் செயற்கைகோள் படம் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதில் அரபிக் கடலின் மேல் பொமேரியன் நாய்க் குட்டி படுத்துக் கிடப்பது போல் புசுபுசுனு மேகக் கூட்டங்கள் காணப்படுவதாக நெட்டிசன்கள் சொல்கிறார்கள். கரு மேகக் கூட்டங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. இது எப்போது எடுத்த படம் என தெரியவில்லை.
அது போல் கடந்த ஜனவரி மாதம் மனிதத் தலை தோற்றத்துடன் கூடிய மேகத்தின் தொகுப்பு இருந்ததும் வைரலாகியுள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது.
இந்த நிலையில் தெற்கு கேரளா, அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழையும், வருகிற 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும்.
மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ஆம் தேதி மாலை நிலவும். இதனால் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 26 ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய வங்கக் கடலின் மத்திய பகுதிகள், தெற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் வரும் 25 ஆம் தேதி வரை அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான், தெற்கு வங்கக் கடல், குமரிக் கடலின் சில பகுதிகளில் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் பருவமழை படிப்படியாக தீவிரமடைந்து வருகிறது. இதனால் தெற்கு அரபிக் கடலின் சில பகுதிகள், மாலத்தீவின் பல பகுதிகள், குமரிக் கடல், தெற்கு வங்கக் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது.
வழக்கமாக கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு மே 31 ஆம் தேதி முன் கூட்டியே தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications