Cyclone Akvan: அசுரத்தனமாக வருகிறான் அக்வான்..உடனே கரைக்கு வாங்க! மீனவர்களுக்கு பறந்த வார்னிங்! NDMA சொன்ன டேட்லைன்
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 18ஆம் தேதிக்குள் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாடு, ஆந்திரா புதுச்சேரி உள்ளிட்ட மாநில மீனவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, நவம்பர் 16-ஆம் தேதி மாலை வாக்கில் புயலாகவும், நவம்பர் 18-ஆம் தேதிக்குள் தீவிரப் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு பலத்த காற்று வீசுவதுடன், கடல் சீற்றம் அதிகரித்து கொந்தளிப்பான சூழல் நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பான அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் அனைவரும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள பாதுகாப்பான துறைமுகம் அல்லது கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஒட்டிய கடல் பகுதிகள் - நவம்பர் 17 வரையும், தென்கிழக்கு வங்கக் கடல் - நவம்பர் 17 வரையும், தென்மேற்கு வங்கக் கடல் - நவம்பர் 15 முதல் 18 வரையும், மத்திய வங்கக் கடல் - நவம்பர் 16 முதல் 19 வரையும் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீன்வளத்துறை, மீன்பிடித் துறைமுக அதிகாரிகள், கடலோர காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு உடனடியாக எச்சரிக்கை தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும், கடலில் உள்ள படகுகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், அவசரகால மீட்புப் பணிகளுக்குத் தயார் நிலையில் இருக்கவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கடலோர கிராமங்களில் ஒலிபெருக்கி, வானொலி, தொலைக்காட்சி மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் எச்சரிக்கைகளைப் பரப்பி, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. புயல் உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



Click it and Unblock the Notifications
