Cyclone Akvan: வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்தம்! புயலாக மாறினால் எங்கு கரையை கடக்கும்?
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. இது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரு வேளை புயலாக மாறினால், இந்த புயலுக்கு ஈரான் பரிந்துரைத்த அக்வான் என பெயரிடப்படுகிறது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் தொடர்ந்து நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பிறகு புயலாகவும் வலுப்பெற கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி
அது போல் மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் வடகடலோர தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலில் இன்றும் நாளையும் என 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிதமான மழை
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் 15, 16 ஆம் தேதிகளில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்துள்ளது.
சென்னையில் நிலவரம்
சென்னையை பொருத்தவரை இன்று வானம் மேக மூட்டமாக காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்தமான், தென்கிழக்கு வங்கக் கடலுக்கு இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக் கடலுக்கும் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்வான் புயல்
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறினால் ஈரான் பரிந்துரைத்த அக்வான் என்ற பாரசீக மொழியிலான பெயர் வைக்கப்படும்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து அந்த மாதத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தமானது, கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி, நவம்பர் 1-ல் புயலாக வலுப்பெற்றது. இதற்கு இந்தியா பரிந்துரைத்த முரசு என்ற பெயரிடப்பட்டது. இது நவம்பர் 2ஆம் தேதி தீவிரபுயலாக வலுப்பெற்றது.
முரசு புயல்
இந்த முரசு புயல் நவம்பர் 3ஆம் தேதி ஆந்திராவின் ஓங்கோல் அருகே தீவிர புயலாகவே கரையை கடந்தது. இதனால் ஆந்திராவில் மட்டுமில்லாமல் தமிழகத்தின் வடகடலோர பகுதிகளுக்கும் நல்ல மழையை கொடுத்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்தது.
எப்போது கரையை கடக்கும்?
இந்த நிலையில் நவம்பர் 13 ஆம் தேதிக்கு பிறகு உருவாகும் புயல்கள் தமிழகத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை புயலாக மாறும் போது இது எப்போது, எங்கே கரையை கடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எல்நினோ ஆண்டு என்பதால் அதீத மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
