ஆமை வேகத்தில் நகரும் அக்வான்! மெதுவான புயல் பெரும் ஆபத்தா.. நிபுணர்கள் சொல்வது என்ன?
சென்னை: அர்னாப் புயல் மிக மிக மெதுவாக நகர்ந்து வருவது கூடுதல் மழைப்பொழிவை தரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது புயல் மெதுவாக கரையை கடக்கும் போது மேகக்கூட்டங்களும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் நீடிப்பதால் அதிக மழை பெய்யும் எனவும், இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அக்வான் புயல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

இந்த புயலானது மேலும் வலுப்பெற்று வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 20 ஆம் தேதி மதியம் ஆந்திராவின் வடக்கு மற்றும் ஒடிசாவின் தெற்கு பகுதியில், நரசாபூர் மற்றும் பூரிக்கு இடையே தீவிரப் புயலாக கடக்க வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் அதாவது புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்திலும், அதிகபட்சம் 110 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெதுவாக நகரும் அக்வான் புயல்
முதலில் அக்வான் புயல் சென்னையில் கரையை கடக்கலாம் என கணிக்கப்பட்ட நிலையில் அதன் திசை மாறி வடக்குப் பக்கம் திரும்பியுள்ளது. அதே நேரம் புயல் முதலில் வரும் 19 ஆம் தேதி தான் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரும் 20 ஆம் தேதி மதியம் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் மிகவும் குறைவான வேகத்திலேயே நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்வான் புயல் தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் வெறும் 3 கிமீ வேகத்திலேயே நகர்ந்து வருகிறதாம். இப்படி புயல் குறைந்த வேகத்தில் நகர்வதால் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புயல் வேகமாக நகர்வதை காட்டிலும் மிகவும் மெதுவாக நகரும்பட்சத்தில் அதிக மழைப்பொழிவை தரும் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நிபுணர்கள் கூறியதாவது:-
புயல் மெதுவாக நகர்ந்தால் அதிக மழை கொட்டும்
கடந்த 2021 ஆம் ஆண்டு 'ஜர்னல் ஆஃப் ஹைட்ரோமெட்டியராலஜி' இதழில் ஓர் ஆய்வு வெளியிடப்பட்டது. அதில், 2010 முதல் 2019 ஆம் ஆண்டு வரை 280 புயல்கள் கரையை கடந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில், புயல் நகரும் வேகத்திற்கும் மழைப்பொழிவிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும், குறிப்பாக மிக மெதுவாக நகரும் புயல்கள் அதிக மழையை கொடுக்கும் என தெரிவித்தனர்.
புயல் மிக மிக மெதுவாக நகரும் போது மேகக்கூட்டங்களும் அதிகம் இருக்கும். நீண்ட நேரம் ஒரே பகுதியில் மழை மேகக்கூட்டங்கள் இருக்கும். இதனால் மழையும் நீண்ட நேரம் பெய்யும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் மழை பெய்யும் போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது என தெரிவித்துள்ளனர். அர்னாப் புயலும் தற்போது 3 கிமீ வேகத்தில் நகர்வதால், புயல் கரையை கடக்கும் போது அதிக மழைப்பொழிவு இருக்கும் என தெரிகிறது.
சென்னைக்கு பாதிப்பா?
ஏற்கனவே நடப்பு வடகிழக்கு பருவமழையின் போது உருவான அர்னாப், முரசு புயல்கள் ஆந்திராவிலேயே கரையை கடந்தன. தற்போது 3 வது புயலாக உருவாகியுள்ள அக்வான் புயலும் ஆந்திரா ஒடிசா இடையே தான் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதலில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்தது. ஆனால் புயல் மேலும் வடக்கு நோக்கி நகரும் என தெரியவந்துள்ளதால் சென்னையில் மிதமான மழைக்கே தற்போது வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அக்வான் புயலால் தற்போதைக்கு சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே தெரிகிறது.
23, 24 ஆம் தேதிகளில் கனமழை பிச்சு உதறும்
தமிழகத்தில் இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ள வானிலை மையம், வரும் 23 ஆம் தேதி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும்,
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல் ஆகிய 17 மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 24 ஆம் தேதியும் பல்வேறு இடங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.




Click it and Unblock the Notifications
