ஆந்திரா பக்கம் யூடர்ன் போடும் சக்கரம்? அப்போ சென்னைக்கு மழை இல்லையா? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இது புயலாக வலுப்பெறும்போது அது எங்கே கரையைக் கடக்கும்.. இதனால் எங்கெல்லாம் மழை பெய்யும்... குறிப்பாக சென்னையில் கனமழை கொட்டுமா என்பது தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையிலும் கூட கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில் இப்போது வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், இது புயலாக வலுப்பெறக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு வெதர்மேன்
அப்படிப் புயலாக வலுப்பெறும்போது இதனால் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பதைத் தமிழ்நாடு வெதர்மேன் எளிமையாக விளக்கியுள்ளார். இது தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், "இந்தச் சக்கரம் 99.99999% ஆந்திராவை நோக்கிச் செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. இது கரையைத் தொடும் பகுதி ஆந்திர மாநிலமாக இருக்கும்.
இது புயலாக வலுப்பெற வாய்ப்புகள் அதிகம். அப்படி அதன் தீவிரம் அதிகரிக்கும்போது லிஸ்டில் உள்ள வரிசையின்படி அந்த புயலுக்குப் பெயர் கிடைக்கும். அடுத்து உருவாகும் புயல்களுக்கு சூட்டப்பட இருக்கும் பெயர்கள்: மொந்தா, சென்யார், திட்வா, அர்னாப், முரசு, அக்வான், காணி ஆகும். இந்த வரிசையில் அடுத்து வரும் புயலுக்கு மொந்தா என்ற பெயர் சூட்டப்படும்.
என்ன நடக்கும்
இந்தச் சக்கரம் வட தமிழகக் கடற்கரைக்கு அருகில் வராமல், நேரடியாக ஆந்திராவை நோக்கிச் சென்றால், கேடிசிசி (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) பகுதிக்கு அதிகக் கனமழை கிடைக்காது. இப்படிக் கடல் நடுவே திசைமாறிச் சென்றால், சாதாரண மழை மட்டுமே பெய்யும்.
சக்கரம் வட தமிழகக் கடற்கரைக்கு மிக அருகில் வந்து, அதன் பிறகு ஆந்திராவை நோக்கித் திரும்பினால், சென்னைக்கு மட்டும் கனமழை பெய்யும். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்த விஷயத்தில் நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். சென்னைக்கு மழை கிடைக்குமா என்பது அப்போது தான் தெரியவரும்.
கனமழை கிடைக்குமா?
தமிழகத்தில் மற்ற எந்த மாவட்டங்களுக்கும் இந்தச் சக்கரத்தால் கனமழை கிடைக்குமா என கேட்டால் கிடைக்காது என்பதே பதிலாகும். இந்தச் சக்கரம் ஆந்திராவை நோக்கிச் செல்வதால், மற்ற மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இருக்காது. கேரளா, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புயலின் இழுவிசை காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய நாட்களாகும்.
ஆந்திராவை நோக்கி செல்கிறது
இந்தப் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்த பிறகு, தமிழகத்தில் அடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வரை மழை பெய்வதில் பெரிய இடைவெளி இருக்கும். நவம்பர் முதல் வாரம் மழை தீவிரமாக இருக்காது.. அதாவது மழை பெய்யும், ஆனால் அதன் தீவிரம் குறைவாகவே இருக்கும். வட தமிழகம் மற்றும் ஆந்திரக் கடற்கரை மீனவர்கள் அக்டோபர் 25 முதல் 28 வரை கடலுக்குச் செல்லாமல் இருப்பதே சரியாக இருக்கும். கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும்.
எங்கு மழை
இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நேற்று போலவே கன்னியாகுமரியில் இன்றும் மிக அதிக மழை பெய்யும். மேற்கு திசைக் காற்றின் காரணமாக நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், வால்பாறை மற்றும் நீலகிரி (பந்தலூர் - அவலாஞ்சி பகுதிகள்) உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்யும். டெல்டா பகுதிகளிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் கனமழை என்றாலே வெள்ளம் ஏற்படும் என அர்த்தமில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் தன்னால் முடிந்தவரை தற்போதைய சூழலைக் கணித்துச் சொல்லியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications