சொன்ன மாதிரியே மிரட்டிய ரெமல்.. இனி தமிழகத்துக்கு மழையும் இருக்கு - வெயிலும் இருக்கு! இதென்ன புதுஸா
சென்னை: ரெமல் புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்திற்கு மழையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வெப்பநிலையும் உயரும் என்று அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ரெமல், தீவிர புயலாக மாறி நேற்று நள்ளிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்தபடியே, நேற்றிரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக ரெமல் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சூறைக்காற்று: புயல் கரையை கடக்க தொடங்கியதுமே, கொல்கத்தா மற்றும் அதனை சுற்றிய இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.. இதனிடையே, தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் ஜூன் 1-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடந்தநிலையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 28 முதல் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
வெப்பநிலை: அதேநேரத்தில், அடுத்த 5 நாட்களுக்கு, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை, வெப்பநிலை உயரும் என்றும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று முதல் ஜூன் 1 வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யலாம். வெப்ப நிலையை பொறுத்தவரை, அடுத்த ஐந்து நாட்களுக்கு, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில், பொதுவாக 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் உயரும். இன்று அதிகபட்ச வெப்பநிலை அனேக இடங்களில் இயல்பை ஒட்டியே இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.
100 டிகிரி வெப்பம்: 2 நாட்களுக்கு முன்பேயே, சென்னையில் அடுத்தடுத்த நாட்களுக்கு வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு பதிவாகும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications