"காரணமே தெரியல.." அப்படியே சரிந்த மக்கள்.. திடீரென 100+ பேர் உயிரிழப்பு! கையை பிசையும் மருத்துவர்கள்
டெல்லி: பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் திடீரென சில நாட்களில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு காரணங்களால் உலகில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த பாதிப்பால், கோடைக் காலம் என்பது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் வெப்பமானதாக மாறி வருகிறது.
குறிப்பாக இந்தாண்டு வெப்பம் நம்மை வைத்துச் செய்துவிட்டது. குறிப்பாக வட இந்தியாவில் பல இடங்களில் தொடர்ச்சியாக வெப்ப அலை வீசியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது

மரணம்: இதற்கிடையே உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் முழுவதும் வெப்ப அலை வீசுவதால் அங்கே சில நாட்களில் பலர் உயிரிழந்துள்ளனர். வெப்ப பக்கவாதத்தால் இந்த உயிரிழப்புகள் ஏற்படுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஒரு மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 70 பேரும், பீகாரில் ஒரு மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் என சில நாட்களில் மட்டும் சுமார் 120 பேர் அதீத வெப்பத்தால் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்புகள் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருவதாக உத்தரப் பிரதேச அரசு கூறியுள்ளது. அதேநேரம் முன்கூட்டியே வெப்ப அலையால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறிய அரசு மருத்துவரை கவனக்குறைவாக அறிக்கை அளித்ததாகக் கூறி டிஸ்மிஸ் கூடச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குழப்பம்: பீகார் எல்லையில் உள்ள உத்தரப்பிரதேச மாவட்டமான பல்லியாவில் ஜூன் 16-18 வரை மூன்று நாட்களில் 54 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர். ரிஸ்வானா காதுன் என்ற பெண் கடந்த ஜூன் 17ஆம் தேதி வெப்ப பக்கவாதம் தொடர்பான அறிகுறிகளால் மருத்துவமனையில் அட்மிட் ஆகினர். சிகிச்சை பலனில்லாமல் அவர் சில நாட்களில் உயிரிழந்தார். இருப்பினும், அவர் எதனால் உயிரிழந்தார் என்பது குறித்த தகவல்களை மருத்துவர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை.
மரணத்திற்கான காரணத்தைக் குறிப்பிடாததால் இறப்புச் சான்றிதழ் பெறுவதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறுகையில், "பக்கவாத அறிகுறிகளால் எனது மனைவியை ஜூன் 16ம் தேதி மருத்துவமனையில் அனுமதித்தேன். மறுநாள் காலை 7 மணிக்கு அவர் உயிரிழந்தார். இறப்பு சான்றிதழ் பெறக் காரணத்தைச் சொல்ல வேண்டும். இருப்பினும், அவர்கள் எதையும் சொல்ல மறுக்கிறார்கள். இதனால் இறப்பு சான்றிதழ் வாங்குவதில் சிக்கல் நிலவுகிறது" என்றார்.

பிரச்சினை: அங்கே பலரும் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டே வருகின்றனர். இதேபோலத் தான் சங்கீதா தேவி என்ற பெண் தனது தாயின் மரணத்திற்கு இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் திணறி வருகிறார். மருத்துவர்கள் உயிரிழப்பிற்குக் காரணத்தைக் குறிப்பிடாமல் இருப்பதே இதற்குக் காரணமாக இருக்கிறது. இந்த உயிரிழப்பிற்கு காரணம் தெரியவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இப்படி திடீரென பலர் உயிரிழக்க என்ன காரணம் என்பதைக் கண்டறிய விசாரணை நடந்து வருவதாகவும் அதன் பின்னர் அதைக் குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும் எனப் பல்லியா மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி எஸ்.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.
அதேபோல உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில், 24 மணி நேரத்தில் சுமார் 50 வெப்ப அலை மரணங்கள் ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அதில் ஒரு மரணம் கூட வெப்ப அலையால் ஏற்பட்ட மரணம் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்யவில்லை.
பீகார் அரசு: மறுபுறம் பீகாரில், போஜ்பூர் மாவட்டத்தில் சுமார் 50 பேர் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர். இங்கே பீகார் மாநிலத்தில் மரணங்களுக்கு வெப்ப அலையே காரணம் என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கடந்த ஜூன் 20ஆம் தேதி ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக 35 பேர் மருத்துவமனையில் அனுமதியான நிலையில், அவர்களில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications